தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் தேவி ஸ்ரீ பிரசாத். டிஎஸ்பி என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இயக்குனர் சுகுமாறன் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்துக்கு டிஎஸ்பி தான் இசையமைத்து இருந்தார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.
புஷ்பா படத்தில் இடம்பெற்ற பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் வெற்றிக்கு பெரிய அளவில் பக்கபலமாக இருந்தது. அதே போல் புஷ்பா 2 படத்துக்கும் தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைத்துள்ளார். ஆனால் பாடல்களுக்கு மட்டுமே அவர் இசையமைத்த நிலையில், இசையமைப்பாளர் சாம்ஸ் சிஎஸ் புஷ்பா 2 படத்துக்கு பின்னணி இசை அமைத்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று சென்னையில் நடந்த புஷ்பா 2 பிரமோசன் நிகழ்ச்சியில் பங்கேற்று மேடையில் பேசிய இசையமைப்பாளர் டிஎஸ்பி, நான் பாடல்களை சரியான நேரத்தில் கொடுப்பதில்லை என்று சொல்கின்றனர். பின்னணி இசையை தாமதமாக கொடுப்பதாக சொல்கின்றனர். என் மீது அன்பு இருக்கும் அதே அளவுக்கு புகார்களும் இருக்கின்றன என்று வெளிப்படையாக பேசியிருந்தார்.
இதற்கிடையே புஷ்பா 2 படத்தில் பின்னணி இசை தராமல் டிஎஸ்பி நீண்ட நாட்கள் தாமதம் செய்ததாகவும், அதே நேரத்தில் அவர் தந்த சில பிஜிஎம் அவ்வளவு தரமாக, ரசிகர்களை கவரும் விதமாக இல்லை என்றும் கூறப்படுகிறது. அதே போல் குட்பேட் அக்லி படத்தில் இருந்தும் தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜீவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
குட் பேட் அக்லி படத்தில் 4 பாடல்கள் என்ற நிலையில், இன்னும் பாடல்களை தராமல் தேவி ஸ்ரீ பிரசாத் இருந்து வருகிறார். ஏற்கனவே இருந்த சில டம்மி பாடல்களை பயன்படுத்தி, பாடல் காட்சி படப்பிடிப்புகளை ஆதிக் ரவிச்சந்திரன் முடித்திருக்கிறார். இதையடுத்து ஜீவி பிரகாஷ்குமாரிடம் அவர்கள் இதுகுறித்து பேச ஒரு வாரத்தில் 4 பாடல்களையும் போட்டுத் தருவதாக உறுதியளித்திருக்கிறார்.
இப்படி இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தாமதம் செய்வதே அவரை படங்களில் இருந்து நீக்குவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி சமீபத்தில் வெளியாகி பயங்கர விமர்சனத்துக்கு உள்ளான கங்குவா படத்தின் இசையமைப்பாளரும் தேவி ஸ்ரீ பிரசாத் தான். அதனால் ஆடியோ ரைட்ஸ் போன்ற விற்பனையிலும் அவர் பெயர் இருந்தால் பாதிப்பு ஏற்படுமே என்ற ஒரு காரணத்தாலும் டிஎஸ்பியை குட்பேட் அக்லி படத்தில் இருந்து வெளியேற்றியதாகவும் ஒரு தகவல் வெளிவந்துள்ளது.





