இயக்குநர் தங்கர்பச்சான் இயக்குநராக சில நல்ல படங்களை தந்திருக்கிறார். நடிகராகவும் சில படங்களில் தன் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். சினிமாத்துறையில் இருந்தும், யதார்த்த மனிதராக வாழும் படைப்பாளிகளில் இவரும் மிக முக்கியமானவர். சமீபத்தில், தங்கர்பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன படம் வெளியானது. விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டாலும் பெரிய அளவில் படம் வெற்றி பெறவில்லை.
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக சென்னை மாநகரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் மழைவெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக சென்னை மாநகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறி காட்சியளிக்கின்றன. வீட்டை விட்டு வெளியேறி வர முடியாத அளவுக்கு, வீட்டை சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்கள் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், விஷால் போன்றவர்கள் அறிக்கை வெளியிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும். எம்எல்ஏக்கள், மக்கள் பிரதிநிதிகள் களத்தில் இறங்கி உதவ வேண்டும் என விஷாலும், அரசுடன் கைகோர்த்து, உதவிகளை செய்ய வேண்டும் என கமலும் கூறியுள்ளனர். ரோபோ சங்கர், விஷ்ணு விஷால், நடிகை நமீதா போன்றவர்களின் வீடுகள் வெள்ளத்தில் சிக்கிய செய்திகள், நேற்று முதல் வைரலாகி வருகிறது.
இப்போது இயக்குநர் மற்றும் நடிகர் தங்கர்பச்சான் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மழை வெள்ளத்தில் மக்கள் சிக்கியுள்ள இந்த நேரத்திலும் வேடிக்கை பார்ப்பதோ, குறை சொல்வதோ, அரசியல் ஆதாயம் தேடுவதோ போன்றவற்றை செய்யாமல், அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது பதிவில், மக்கள் வெள்ளத்துயரில் சிக்கி தவித்துக்கொண்டு இருக்கின்றனர். இந்த நேரத்தில் மக்களுக்கு உதவிக்கொண்டு இருப்பவர்களை குறை சொல்லி அரசியல் ஆதாயம் தேடாதீர்கள். வேடிக்கை பார்த்துக்கொண்டு, குறை கூறிக்கொண்டு இருக்காதீர்கள். அனைத்து அரசியல் கட்சியினரும் களத்தில் இறங்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதே உண்மையான அரசியல் பணியாக இருக்கும்.
இந்த நேரத்தில் உச்சத்தில் இருக்கும் பெரிய நட்சத்திர நடிகர்களும், அவர்களின் லட்சக்கணக்கான ரசிகர்களும் களத்தில் இறங்கி உதவினால், பாதிக்கப்பட்ட மக்களின் நிலமை விரைவில் சீரடையும். இதை உடனே செய்ய முன்வர வேண்டும். அப்போதுதான் உங்களை உயர்த்தி விடும் மக்களுக்கு, நடிகர்களாகிய நீங்கள் செய்யும் நன்றிக்கடனாக இருக்கும் என்பதை நினைவில் வைத்திருங்கள் என்று கூறியிருக்கிறார் இயக்குநர் தங்கர்பச்சான்.





