தமிழ் சினிமாவில் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்பது எப்போதும் அரிதான விஷயம் தான். அதுவும் உச்ச நட்சத்திரங்கள் ஒரே திரைப்படத்தில் நடிப்பது என்பது இங்கு நடந்து பல ஆண்டுகள் ஆகின்றன. பாகுபலி இயக்குனர் ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் படத்தை எடுத்த போது கூட, இங்கும் அது போல் நட்சத்திரங்கள் இணைந்தால் நன்றாக இருக்குமே என்று பலரும் கூறி வந்தனர்.
ஆனால் அதற்கான எந்த முயற்சியையும் தமிழ் பட இயக்குனர்கள் கையில் எடுத்தது போலவே தெரியவில்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் அஜித் மற்றும் விஜயை வைத்து தான் ஒரு படத்தை எடுப்பேன் என்று வெங்கட் பிரபு மட்டும் கூறியிருந்தார். மற்ற இயக்குனர்கள் பெயர் அளவில் கூட இது குறித்து பேசவில்லை.
இப்படியான சூழலில் தான் கோலிவுட்டில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு விஷயம் நடந்திருக்கிறது. அதாவது, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோர் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தனுஷ் தற்போது இட்லி கடை திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதன் இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தத் திரைப்படம் வரும் ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை தொடர்ந்து அவர், இயக்கத்திற்கு சிறிது நாட்கள் இடைவெளி விட்டு, அடுத்தடுத்த படங்களில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார்.
இதே போல் சூர்யாவும் தற்போது ஆர் ஜே பாலாஜி திரைப்படத்தில் நடித்து வருகிறார். கோவை மாவட்டத்தில் இதன் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 40 சதவீத பணிகள் இதில் முடிந்திருப்பதாக கூறுகிறார்கள். இந்த நிலையில், தனுஷ் அடுத்ததாக வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வெங்கி அட்லுரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது அவர் தனுசுடன் மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படத்தில் புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது இது டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டாம். அதில் சூர்யாவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு ஹானஸ்ட் ராஜ் என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த தகவலால் கோலிவுட் திரையுலகமே ஆச்சரியத்தில் மூழ்கி இருக்க, அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள்.





