நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ் படம் இட்லி கடை. இந்த படத்தை அவரே டைரக்ட் செய்திருந்தார். சத்யராஜ் ராஜ்கிரண் அருண்விஜய் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு வணிகரீதியான வெற்றியை பெறவில்லை.
அடுத்து இந்தியில் அவர் நடித்த தேரே இஸ்க் மெய்ன் என்ற படம் வெளியாக அபாரமான வரவேற்பை பெற்றது. வணிக ரீதியாக வசூலையும் வாரிக் குவித்தது. இப்போது நடிகர் தனுஷ் தனது டி 55 படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
போர்த்தொழில் படம் தமிழ் சினிமாவில் மிகவும் கவனம் பெற்ற திரில்லர் படமாக இருந்தது. இந்த படத்தில் அசோக் செல்வன் சரத்குமார் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். கிரைம் திரில்லர் படமாக இந்த படம் பெரிய வெற்றியை பெற்ற நிலையில் தனுஷ் நடித்த கர படத்துக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி தலைவன் தலைவி வெற்றிப் படத்துக்கு பிறகு அவரது அடுத்த படம் திரைக்கு வர உள்ளது. தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாதன் இயக்கிய இந்த படத்துக்கு ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோடு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் தெலுங்கில் உருவாகி தமிழில் டப்பிங் செய்ப்பட்டு வெளியாக உள்ளது.
அதே போல் தமிழில் உருவாகி உள்ள தனுஷ் நடித்த கர படமும் தமிழில் உருவாகி தெலுங்கில் டப்பிங் செய்யப்பட உள்ளது. நடிகர் தனுஷ் நடித்த கர படமும் நடிகர் விஜய் சேதுபதி நடித்த ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோடு படமும் வருகிற ஏப்ரல் 10ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியீடு செய்யப்படுகிறது.
தமிழ் புத்தாண்டில் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதால் அந்த பண்டிகை நாட்களை முன்னிட்டு நடிகர்கள் விஜய் சேதுபதி தனுஷ் நடித்த படங்கள் களத்தில் மோதுகின்றன. இந்த படங்கள் தமிழ்நாடு ஆந்திரா தெலுங்கானா பகுதிகளில் அதிக வரவேற்பை பெறும் படங்களாக, வசூலை குவிக்கும் வெற்றிப் படங்களாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.





