இன்று தமிழ் சினிமாவில் மிகவும் பரபரப்பாக காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு ஓடும் இசையமைப்பாளர்தான் அனிருத். அவரது டேட்டுக்காக இங்கு ஏராளமான தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் காத்துக் கிடக்கின்றனர். இதற்கு மிக முக்கிய காரணம், அவரின் சக்சஸ் ஸ்டோரி தான்.
ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜய் அஜித் சூர்யா என மூத்த நடிகர்களின் படங்களில் பணிபுரிந்திருக்கும் அனிருத், அதில் சூப்பர் ஹிட் பாடல்களையும் கொடுத்து அசத்தி இருக்கிறார். சொல்லப்போனால் ஒரு பாடலை ரசிகர்களிடம் எளிதாக கொண்டு சேர்ப்பதில் அவர் கிங் என்றே கூறலாம்.
மிக முக்கியமாக, பெரிய ஸ்டார்களின் திரைப்படத்தின் பின்னணி இசையில் வெளுத்து வாங்கி விடுவார் அனிருத். அதில் எந்த குறையும் அவர் வைக்க மாட்டார். தற்போது விஜயின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு அவர்தான் இசையமைத்து வருகிறார். ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் கூலி திரைப்படத்திற்கும் அவர்தான் இசையமைப்பாளர்.
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் கவனம் பெற்று இருக்கும் அனிருத், ஆரம்பத்தில் 3 திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருந்த அந்த திரைப்படத்தில், பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகின.
குறிப்பாக தனுஷ் எழுதி பாடியிருந்த ஒய் திஸ் கொலவெறி பாடல், உலகம் முழுவதும் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து தனுஷ் – அனிருத் இடையே நல்ல ஒரு பழக்கம் ஏற்பட, அவரது திரைப்படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வந்தார். குறிப்பாக வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தின் வெற்றிக்கு அனிருத் மிக முக்கிய காரணம் என்றே கூறலாம்.
ஆனால் சில மனஸ்தாபம் காரணமாக இருவர் இடையே விரிசல் ஏற்பட்டது. இது திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் சரியானது. அதிலும் அத்தனை பாடல்களையும் சூப்பர் ஹிட்டாக கொடுத்திருப்பார் அனிருத். இப்படி தனுஷ் அனிருத் சேர்ந்தாலே அங்கு ஒரு மேஜிக் நடக்கும் சூழலில் தற்போது மீண்டும் இந்த காம்போ இணைந்திருக்கிறது. லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் திரைப்படத்தில் தனுஷ் நடிக்க அதில் தான் அனிருத் இசை அமைக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.





