நடிகர் தனுஷ், தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நடிகராக, முக்கிய இடத்தில் இருக்கிறார். துவக்க காலத்தில், அவர் நடிக்க வந்த போது தனுஷ் படங்களை பார்த்த சிலர், ஒல்லிப்பிச்சான் நடிகர் என விமர்சித்தனர். சில பத்திரிகைகள் கூட அவரை ஒல்லிப்பிச்சான் நடிகர் என்றே குறிப்பிட்டன.
ஆனால் தன் திறமையாலும், நடிப்பாலும், அயராத உழைப்பாலும் தமிழ் சினிமாவில் இப்போது உள்ள டாப் 10 நடிகர்களில் ஒருவராக ஒரு படத்துக்கு ரூ. 50 கோடி சம்பளம் வாங்கும் ஒருவராக நடிகர் தனுஷ் இருக்கிறார். நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்ததால், சூப்பர் ஸ்டாரின் மருமகன் என்ற பெருமையும் தனுஷ்க்கு உள்ளது.
இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன், இயக்குனர் செல்வராகவன் தம்பி என்ற அடையாளங்களை எல்லாம் கடந்து, தனுஷ் இப்போது நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக, பாடகராக பல பரிமாணங்களுடன் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை அடைந்துள்ளார். இதற்கு காரணம், அவருக்கு கிடைத்த படங்களும், அதில் அவருக்கு அமைந்த கேரக்டர்களும், குறிப்பாக இயக்குனர்களும்தான்.
அந்த வகையில் நடிகர் தனுஷ்க்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்த படங்கள் என்றால், அது வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய படங்கள்தான். அதே வேளையில், வெற்றிமாறன் என்பவர் படைப்பை நம்புகிற யதார்த்த படைப்பாளி. அவரிடம் கதை தான் பேசும். நடிகர் அந்த படைப்பின் வழியே வெளிப்படுபவராக தான் இருப்பார்.
ஆனால் தனது ஆஸ்தான குரு இயக்குனராக வெற்றிமாறனை, நடிகர் தனுஷ் இளையராஜா பயோபிக் படத்தை எடுக்க சிபாரிசு செய்யவில்லை. மாறாக கர்ணன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜையும், கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரனையும்தான் சிபாரிசு செய்து இளையராஜாவிடம் அனுப்பி வைத்தார். அந்த இருவரில் இளையராஜா, அருண் மாதேஸ்வரனை தேர்வு செய்தார்.
இப்போது தமிழ் சினிமா ரசிகர்களிடம் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி, வெற்றிமாறனை விட சிறந்த இயக்குனர்களாக அருண்மாதேஸ்வரன், மாரி செல்வராஜை தனுஷ் முடிவு செய்தது ஏன், என்பதுதான். இளையராஜா படத்தை வெற்றிமாறன் இயக்கினால், அதில் ஒரு படைப்பாளியாக வெற்றிமாறன் மட்டுமே ஜெயிப்பார். அது வெற்றிமாறனின் படமாக இருக்கும். தனுஷ், பின்தங்கி விடுவார். எனவே, தனது புகழ் இந்த படத்தில் பேசப்பட வேண்டும் என்ற சுயநலத்துக்காக வெற்றிமாறனை தனுஷ், இளையராஜா படத்தில் திட்டமிட்டு தவிர்த்திருப்பது உறுதியாகி உள்ளது.





