தமிழ் சினிமாவில் இப்போதைக்கு டாப் ஆஃப் தி டாபிக் என்னவென்றால் அது கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளியீட்டாகத்தான் இருக்கும். கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து வகையான படத்திலும் நடித்த தனுஷ், அடுத்ததாக தேர்ந்தெடுத்து இருக்கும் கதைதான் கேப்டன் மில்லர். கடந்த ஆண்டு திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய இரண்டு வெற்றி படங்களை கொடுத்த தனுஷ், தொடர்ந்து தெலுங்கில் வாத்தி திரைப்படத்தில் நடித்தார்.
இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்கிய இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதன் பிறகு தமிழில் அவர் நடிக்க திட்டமிட்ட படம் கேப்டன் மில்லர். ராக்கி, சாணி காயிதம் என்று இரண்டு படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன், கேப்டன் மில்லரின் மூலம் தனுஷை இயக்கும் வாய்ப்பை பெற்றார். தனது முந்தைய திரைப்படங்களின் ரத்தம் தெறிக்க தெறிக்க, ராவான காட்சிகளை வைத்திருந்த அருண் மாதேஸ்வரன், தனுசுடன் இணையப் போகிறார் என்றதும் பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியது.
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. படத்தில் பிரியங்கா மோகன், கன்னட பிரபலம் சிவராஜ்குமார் உள்ளிட்டோர் இணைந்தனர். தென்காசியில் படப்பிடிப்பு நடைபெற்ற போது வனத்துறையிடம் உரிய அனுமதி வாங்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் சூட்டிங் நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து மதுரையில் நடந்த படப்பிடிப்பிலும் இதே பிரச்சினை எழும்ப, ஒரு வழியாக சமாளித்த படக்குழு நிறுவனம் ஷூட்டிங்கை நடத்தி முடித்தது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த திரைப்படம், முழுக்க முழுக்க சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அவர்களை எதிர்க்கும் கேப்டன் மில்லரின் பின்னணி குறித்து இந்த படம் விளக்குவதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு, கேப்டன் மில்லரின் டீசர் வெளியாகி உள்ளது. இதில் மூன்று விதமான கெட்டப்புகளில் தனுஷ் தோன்றுகிறார். ஒரு நிமிடம் 33 வினாடிகள் ஓடும் இந்த டீசர் வீடியோவில், எடுத்தவுடன் தேடப்படும் குற்றவாளியாக தனுஷின் புகைப்படம் ஒரு காகிதத்தில் இருப்பது போல் காட்சிகள் ஆரம்பிக்கின்றன. இதைடுத்து அனல் பறக்கும் சண்டை காட்சிகளுடன், டீசரில் இடம் பெற்ற ஒவ்வொரு கதாபாத்திரங்களும் கவனிக்க வைக்கின்றன.
படத்தில் இடம்பெற்றுள்ள அத்தனை கதாபாத்திரங்களும் கையில் துப்பாக்கியுடன் வருவதால், இதில் வன்முறை சற்று தூக்கலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நாள் வரை மென்மையான கதாபாத்திரங்களில் நடித்து வந்த பிரியங்கா மோகன் இந்த படத்தில் துப்பாக்கி தூக்கி உள்ளார். அது மட்டுமில்லாமல் சிவராஜ்குமார், சந்திப் கிஷன், ஜான் கொக்கேன் என அனைவருமே கையில் துப்பாக்கியுடன்தான் காட்சியளிக்கின்றனர். ஒட்டுமொத்தமாக டீசர் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், கேப்டன் மில்லர் திரைப்படம் வரும் டிசம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





