தமிழ் சினிமாவில் தற்போது பிஸியாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் அண்மையில் வெளியானது. செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ், அபர்ணா பால முரளி, துஷாரா விஜயன், பிரகாஷ் ராஜ், சரவணன் உள்பட ஏராளமானோர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
ஆக்சன் கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது. என்னதான் படம் வசூல் மழை குவித்தாலும், விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் அவ்வளவு பெரிய திருப்தியை கொடுக்கவில்லை.
அண்ணனுக்கு துரோகம் செய்யும் தம்பி, திரும்ப பழி வாங்கும் அண்ணன் தங்கை என அரைத்த மாவையே தனுஷ் அரைத்து வைத்திருப்பதாக பலரும் குறை கூறினர். அதேபோல் இதன் இரண்டாம் பாதியில் திரைக்கதை மிக வீக்காக எழுதப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
இது ஒரு பக்கம் இருக்க, தனுஷ் தொடர்ந்து தனது இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது இயக்கத்தில் மூன்றாவது படமாக உருவாகி இருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்திலிருந்து அண்மையில் ஒரு பாடல் வெளியானது. இதற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இளைஞர்களின் காதலை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
இதில் தனுஷின் சகோதரியின் மகனும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். அனேகமாக, இன்னும் இரண்டு மாதங்களில் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மீண்டும் இயக்கத்தின் பக்கமே கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் தனுஷ். இந்த முறை தேனியில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.
இதற்கு இட்லி கடை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படத்தில் வில்லனாக வருகிறார் அருண் விஜய். அதேபோல் அசோக் செல்வனுக்கும் ராஜ்கிரனுக்கும் மிக முக்கிய கதாபாத்திரத்தை தனுஷ் கொடுத்திருக்கிறார். Dawn பிக்சர்ஸ், தனுஷின் வொண்டர் பார் நிறுவனம், மற்றும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றன. ஜிவி பிரகாஷே இதற்கு இசை அமைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





