துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமான தனுஷ், இப்போது தனது 50வது படமாக ராயன் படத்தை அவரே டைரக்ட் செய்திருக்கிறார். ஏற்கனவே ராஜ்கிரண், ரேவதி காதலை மையப்படுத்தி ப பாண்டி என்ற படத்தை டைரக்ட் செய்து பாராட்டை பெற்றார். மேலும் தனது அக்கா மகனை ஹீரோவாக நடிக்க வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் டைரக்ட் செய்து முடித்துள்ளார்.
அத்துடன், தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா டைரக்ஷனில் குபேரா படத்தில் இப்போது நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஏறக்குறைய இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா தனுஷூக்கு ஜோடியாக நடித்துள்ளார். அத்துடன் வரும் ஆகஸ்ட்டில் துவங்கும் இளையராஜா படத்திலும், தனுஷ் நடிக்க உள்ளார்.
இதற்கிடையே நடிகர் தனுஷ் இயக்கியுள்ள ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் ஜூன் 2ம் தேதி சென்னை சாய்ராம் இன்ஜினியரிங் கல்லூரியில் நடப்பதாக இருந்த நிலையில், அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதே போல் ஜூன் 13ல் ரிலீஸ் செய்யப்படுவதாக இருந்த ராயன் படம் ரிலீஸ் தேதியும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ராயன் இசை வெளியீட்டு விழா தள்ளி வைக்க முக்கிய காரணமாக கூறப்பட்டது, கமல்ஹாசனின் இந்தியன் 2 இசை வெளியீடு விழா தான். ஏனெனில், ஜூன் 1ல், சென்னை நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் மிக பிரமாண்டமாக இந்த விழாவை, டைரக்டர் ஷங்கர் நடத்துகிறார். லைகா புரடக்சன்ஸ் இதற்கான ஏற்பாடுகளை மிக சிறப்பாக செய்துள்ளது.
இந்த சூழலில், அடுத்த நாள் ராயன் இசை வெளியீடு நடந்தால் பெரிய அளவில் ரசிகர்களிடம் ரீச் ஆகாது என்பதால், தனுஷ் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. அத்துடன், படத்தின் சில காட்சிகள் திருப்தி தராததால் ரிஷூட் செய்யவும் தனுஷ் முடிவு செய்திருப்பதால், இந்த முடிவுக்கு வந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், ராயன் படத்தின் இயக்குனர் தனுஷ், தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் ஒரு பதிவை அப்டேட் செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் முதுகு காட்டியபடி ஏஆர் ரகுமான் அமர்ந்திருக்க, எதிரே கம்ப்யூட்டரும், அதற்கு மேலே ராயன் படக்காட்சியும் தெரிகிறது. அதில், ராயன் படத்திற்கான பின்னணி இசை பணிகள் நிறைவடைந்தன. புயல் வந்துக்கொண்டு இருக்கிறது, என்று தனுஷ் அதில் குறிப்பிட்டுள்ளார்.





