நடிகர் தனுஷ் சமீப காலமாக இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார். தனது 50 ஆவது திரைப்படமான ராயனை அவர் இயக்கி நடித்திருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டியது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்த போதே, உடனடியாக அடுத்த திரைப்படத்தையும் இயக்க ஆரம்பித்தார் தனுஷ். ஆனால் அவர் இதில் நடிக்கவில்லை. மாறாக தனது சகோதரியின் மகனை படத்தில் அறிமுகப்படுத்தினார். இதற்கு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என டைட்டில் வைத்தார். இந்த படத்தில் இருந்து வெளியான கோல்டன் ஸ்பேரோ பாடல் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது.
இளைஞர்களின் காதலை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் சரத்குமார் நடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி 7ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படி அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களை இயக்கிய தனுஷ், தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலாவுடன் இணைந்து குபேரா படத்தில் பணியாற்றினார்.
நாகர்ஜுனா, ராஸ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த திரைப்படம், விரைவில் வெளியாகிறது. ஏற்கனவே இதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பிச்சைக்காரனாக இருக்கும் தனுஷ் எப்படி கோடீஸ்வரர் ஆகிறார் என்பதை மையப்படுத்தி தான் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள்.
இந்த படத்தை முடித்த கையோடு மீண்டும் இயக்கத்தில் குதித்திருக்கிறார் தனுஷ். இந்த முறை தனது திரைப்படத்திற்கு இட்லி கடை என பெயர் வைத்திருக்கிறார். தனுஷின் சொந்த மாவட்டமான தேனியை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் கதாநாயகியாக, நித்யா மேனன் நடித்துள்ளார்.
ஏப்ரல் 10 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக இருக்கும் சூழலில், தற்போது அந்த திரைப்படத்திலிருந்து போஸ்டர்களை வெளியிட்டு இருக்கிறார் தனுஷ். இதில் நெற்றியில் பட்டையை அடித்துக் கொண்டு கையில் காய்கறி உடன் காட்சியளிக்கிறார் தனுஷ். இதேபோல் ராஜ்கிரண் நடித்திருப்பதும் படத்தில் இடம்பெற்றுள்ள போஸ்டரின் மூலம் உறுதியாகி இருக்கிறது. பீரியட் திரைப்படமாக இது எடுக்கப்படுவதாக கூறுகிறார்கள். இருப்பினும் டீசர் அல்லது ட்ரைலர் வெளியான போதே அது உறுதிப்படுத்தப்படும் என்று சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.





