சமீபகாலமாக மதுரையில் பெரும்பாலான தமிழ் படங்கள் உருவாகின்றன. மதுரையை கதைக்களமாக கொண்ட படங்கள் உருவாவது மட்டுமின்றி மதுரையில் எடுப்பது போன்ற கதைக்களங்களை தேர்வு செய்வதில் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இதுவும் மதுரையில் படப்பிடிப்புகள் அதிகரிக்க முக்கிய காரணமாகும்.
சென்னையை பொறுத்தவரை படப்பிடிப்பு நடத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்களும் சிரமங்களும் இருக்கின்றன. மேலும் சென்னையில் படப்பிடிப்பு நடத்த அலுவலகங்கள் அமைத்துக் கொள்ள பெரும்பாலான பில்டிங் உரிமையாளர்கள் அனுமதி தருவதில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
இந்த சூழலில் மதுரையில் தொடர்ந்து தமிழ் படங்கள் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வருவதால் கோலிவுட்டே மதுரையில் தான் முகாமிட்டுள்ளது. தாய்கிழவி பட இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் சேயோன் ஷூட்டிங் மதுரையில் நடந்து வருகிறது. நடிகர் தனுஷ் நடிக்கும் அடுத்த படம் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் மதுரையில் உருவாகிறது.
நடிகர் ஜீவா நடிக்கும் தகப்பன் படமும் மதுரையில் உருவாக உள்ளது. இப்படி தொடர்ந்து மதுரையை இயக்குனர்கள் தேர்வு செய்ய முக்கிய காரணங்கள் தெரியவந்துள்ளது. மதுரை மற்றும் மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் ஏகப்பட்ட துணை நடிகர்கள் உள்ளனர். அதனால் சொந்த ஊர்களை சேர்ந்த அவர்களை படப்பிடிப்பு தளங்களில் மிக எளிதாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதுவும் படத்தின் திரையில் அவர்கள் இருப்பது கதைக்களத்துடன் ஒன்றியதாக பொருத்தமாக இருக்கும்.
அதே நேரத்தில் சென்னையில் இருந்து துணை நடிகர்களை அழைத்துச் சென்றால் போக்குவரத்து செலவு தங்குமிட வசதி என ஏகப்பட்ட செலவு தயாரிப்பாளருக்கு ஏற்படும். மதுரையில் நல்ல உணவு வசதியும் உள்ளது. மேலும் மதுரையில் சினிமா கலைஞர்களுக்கும் படப்பிடிப்பு குழுவினருக்கும் மரியாதையும் நல்ல ஒத்துழைப்பும் அந்த ஊர் மக்களிடம் கிடைக்கிறது. அதனால் தான் மதுரையில் தமிழ் சினிமா முகாமிட்டுள்ளது.
கடந்த 1980 90 காலகட்டத்தில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், கோவையை அடுத்த பொள்ளாச்சி ஊட்டி மற்றும் கொடைக்கானல் முக்கிய படப்பிடிப்பு தளங்களாக இருந்தது. ஆனால் அந்த பகுதிகளில் படப்பிடிப்புகள் நடத்துவது வெகுவாக குறைந்துவிட்டது. ஆனால் மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து தமிழ் சினிமா படப்பிடிப்புகள் நடந்து வருவது அங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பையும் தருகிறது. மதுரையும் சென்னையைப் போலவே ஒரு மினி கோடம்பாக்கமாக மாறிக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.





