நடிகர் தனுஷிற்கு கடந்த ஆண்டு கேப்டன் மில்லர் மற்றும் ராயன் என இரண்டு திரைப்படங்கள் வெளியாகி இருந்தன. இதில் ராயன் திரைப்படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் தனுஷ்.
மும்பையை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் இதில் நடித்திருக்கிறார்கள். இதில் பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் வருகிறார் தனுஷ். சமீபத்தில் வெளியான இதன் டீசர் பலரையும் கவனிக்க வைத்தது.
இதனைத் தொடர்ந்து தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் தனுஷ் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். முதலாவதாக அவர், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்னும் திரைப்படத்தை இயக்கி முடித்தார். அதன் தலைப்புக்கு கீழே இது வழக்கமான காதல் கதை தான் என்று தனுஷ் கூறியிருந்தார். தனுஷின் சகோதரி மகன் தான் இதில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
அதுபோக, இளம் நடிகர்கள் நடிகைகள் இதில் இடம் பெற்று இருக்கிறார்கள். சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்கள். அண்மையில் வெளியான இந்த திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. வரும் 21ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகிறது.
இதனைத் தொடர்ந்து இட்லி கடை என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். மதுரை மற்றும் தேனி சுற்றுவட்டார பகுதிகளில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. கதாநாயகியாக நித்யா மேனன் நடித்துள்ளார். ராஜ்கிரனுக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அருண் விஜய் வில்லனாக வருகிறார். இந்த திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
அதே தேதியில் அஜித்குமாரின் குட் பேட் அக்லி படமும் வெளியாகும் என கூறப்பட்டதால் இட்லி கடை தள்ளிப் போகும் என்று பலரும் கூறினார்கள். ஆனால் படத்தை 10 ஆம் தேதி வெளியிடுவதில் உறுதியாக இருந்தார் தனுஷ். தற்போது அதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஆனால் தற்போது கிடைத்திருக்கும் தகவல் படி, இட்லி கடை திரைப்படம் பத்தாம் தேதி வெளியாக வாய்ப்பு இல்லை என்று கூறி வருகிறார்கள். பணிகள் மீதம் இருப்பதால், ஆகஸ்ட் மாதமே இட்லி கடை வெளியிடப்படும் என்று சொல்லப்படுகிறது. இது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.





