தனுஷ் இயக்கத்தில் நான்காவதாக உருவாகி இருக்கும் திரைப்படம் இட்லி கடை. இதற்கு முன்னதாக அவர் இயக்கத்தில் முதலாவதாக வெளிவந்த பவர் பாண்டி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. காதலை மையப்படுத்தி இந்த திரைப்படத்தை தனுஷ் இயக்கியிருந்தார். தொடர்ந்து ராயன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய திரைப்படங்கள் தனுஷின் இயக்கத்தில் வெளிவந்தன.
இப்படியான சூழலில்தான் தற்போது தனுஷ், இட்லி கடை திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இந்த திரைப்படத்தை தயாரித்து உள்ளார். படத்தில் கதாநாயகியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். ஷாலினி பாண்டேவுக்கும் முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதுபோக அருண் விஜய் படத்தில் நடித்திருப்பது தான் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்திருக்கிறது. குத்துச்சண்டை வீரராக அவர் படத்தில் வருகிறார். அவருக்கு வில்லன் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சத்யராஜ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி, பார்த்திபன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இட்லி கடை திரைப்படத்தில் இணைந்து இருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதமே இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருந்தது. அப்போது குட் பேட் அக்லி திரைப்படத்துடன் போட்டியிட தயாராக இருந்தது இட்லி கடை. ஆனால் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அதன் வெளியீட்டு தேதி தள்ளிப்போனது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 1ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட சூழலில் தற்போது அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
ஜிவி பிரகாஷ் இசையில் இந்த திரைப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் ஓரளவு வரவேற்பை பெற்றுள்ளன. இதில் முருகன் என்னும் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்படியான சூழலில்தான் படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது. அதில் இட்லி கடை வைத்திருக்கும் ராஜ்கிரணின் மகனாக நடித்திருக்கிறார் தனுஷ். வெளிநாட்டில் அவர் ஹோட்டல் சம்பந்தப்பட்ட தொழில் செய்து வருகிறார்.
ஒரு கட்டத்தில் தனது தந்தை தொழிலை கவனிக்க அவர் கிராமத்திற்கு திரும்புகிறார். இட்லி கடையே அவரது முழுமூச்சாக மாறுகிறது. இதன் பிறகு நடக்கும் திருப்புமுனைகளை மையப்படுத்திதான் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக பார்க்கையில் முன்னோட்டம் நன்றாகவே இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.





