இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் குருகுலத்தில் வெளிவந்தவர் கே பாக்யராஜ். ஒரு கட்டத்தில் குருவை மிஞ்சிய சிஷ்யனாக கலையில் திறமை காட்டி பாரதிராஜாவையே வியப்படைய செய்தார். என் இடத்துக்கு என் சிஷ்யன் வருவான் என்று குரு பாரதிராஜா சொன்னதை வேத வாக்காக ஏற்று அதை பிற்காலத்தில் செயல்படுத்தி காட்டியவர்.
இன்று வரை இந்திய சினிமாவில் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்றால் அந்த பெருமை கே பாக்யராஜூக்கு மட்டும்தான். ஏனெனில் அவரது படங்கள் எல்லாமே திரைக்கதை விஷயத்தில் ஒரு முனைவர் பட்டம் பெறும் அளவுக்கு நிறைய விஷயங்கள் அடங்கியிருக்கும். மேலோட்டமாக பார்த்தால் அது தெரியாது.
திரைப்படத்தில் கதை ஓட்டத்தில் வரும் சின்ன சின்ன விஷயங்களில் கூட பாக்யராஜ் அதன் நெளிவு சுளிவுகளை அறிந்து அதற்கேற்ப வசனங்களை காட்சியமைப்பை உருவாக்கி இருப்பார். ஒரு கேரக்டர் பேசும் போது மற்ற கேரக்டர்களின் அசைவுகளில் கூட அதற்கான பதில்களை வைத்திருப்பார். அதே நேரத்தில் யதார்த்தத்தை மீறிய காட்சிகள் அவரது படங்களில் இருக்காது.
அதனால் கடந்த 1980களில் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் இருவரும் தமிழ் சினிமாவில் பெரிய நட்சத்திரங்களாக இருந்தார்கள். அவர்கள் இருவரது படங்கள் அதிக வரவேற்பை கவனத்தை பெற்றன. அப்படிப்பட்ட ஒரு சூழலில் அவர்கள் நடித்த படங்கள் 50 லட்சம் ரூபாய் 60 லட்சம் ரூபாய் என்ற அளவில்தான் வியாபாரம் நடந்தது.
ஏனென்றால் அப்போது லட்சங்களில் தான் சினிமாவில் முதலீடும் வியாபாரமும் இருந்தது. ஆனால் அந்த காலகட்டத்தில் முதன்முதலாக தமிழ் சினிமாவில் ஒரு கோடி ரூபாய்க்கு வியாபாரமான முதல் திரைப்படம் நடிகர் கே பாக்யராஜ் நடித்து இயக்கிய தாவணிக்கனவுகள் படம் தான் என்பது பலரும் அறியாத உண்மை. ஒரு திரைப்படம் 100 லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் என்பது சாதாரண விஷயம் அல்ல.
இன்றைய கோலிவுட்டில் 1 கோடி ரூபாய் என்பது ஒரு நாளில் செய்யப்படும் ஷூட்டிங் செலவை விட குறைவாக உள்ளது. ஆனால் 45 ஆண்டுகளுக்கு முன்பு 1 கோடி என்பது பெரிய பிரமிக்க வைக்கும் தொகையாக இருந்துது. தாவணி கனவுகள் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தில் அப்போது உதவி இயக்குனராக இருந்த நடிகர் பார்த்திபனும் நடித்திருந்தார்.





