தென்னிந்திய சினிமா ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில், முன்னாள் நிர்வாகிகள் மீது நிதி முறைகேடு தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்து குறிப்பிட்ட மாதங்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் போலீசார் விசாரணையை முடிக்கவில்லை என, ஒளிப்பதிவாளர் சங்க செயலாளர், பிரபல நடிகர் இளவரசு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இதுகுறித்து ஆஜரான போலீசார், டிசம்பர் 12ம் தேதி, இந்த வழக்கு குறித்து நடிகர் இளவரசு போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார் என தெரிவித்தனர்.
அதற்கு மறுப்பு தெரிவித்த இளவரசு, குறிப்பிட்ட தேதியில் நான் மாமல்லபுரத்தில் ஷூட்டிங்கில் இருந்தேன். போலீசார் பொய்யான தகவலை சொல்கின்றனர் எனக் கூறினார். இதையடுத்து அவர் 12ம் தேதி ஸ்டேஷனுக்கு வந்த சிசிடிவி காட்சிகள் ஆதாரங்களை போலீசார் சமர்பித்த போது, அவை போலியானவை, நான் வரவே இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
இதையடுத்து டிசம்பர் 12ம் தேதி அவரது மொபைல் போன், அவரது செல்போன் அழைப்புகள் குறித்த விவரங்களை சேகரித்த போலீசார், குறிப்பிட்ட நாளில் அவர் சென்னையில், ஒளிப்பதிவாளர் சங்கத்தில் இருந்ததை உறுதிப்படுத்தினர். போலீஸ் ஸ்டேஷனில் அவர் ஆஜரான ஆதாரங்களையும் கோர்ட்டில் சமர்பித்தனர்.
இதைத்தொடர்ந்து, நடிகர் இளவரசு கோர்ட்டில் பொய் பேசக் கூடாது. அவர் தாமாக முன்வந்து மன்னிப்பு கேட்டால், ஏற்றுக்கொள்ளப்படும். இல்லை என்றால் அவர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என வழக்கை விசாரித்த நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கோர்ட்டில் ஆஜரான இளவரசு சார்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கை 7 ஆண்டுகளாக விசாரித்து நடவடிக்கை எடுக்காத பாண்டிபஜார் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள் நேரில் ஆஜராக, நீதிபதி உத்தரவிட்டார்.





