கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் லப்பர் பந்து. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இந்த திரைப்படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டது. தமிழரசன் பச்சமுத்து என்பவர்தான் இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தார். இயக்குனர் அருண்ராஜ் காமராஜின் உதவியாளராக இருந்த அவர், கனா திரைப்படத்திலும் பணிபுரிந்து இருக்கிறார்.
இதனை தொடர்ந்துதான் லப்பர் பந்தை இயக்கும் வாய்ப்பு தமிழரசன் பச்சமுத்துவுக்கு கிடைத்தது. அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் கூட்டணியில் உருவான இந்த திரைப்படம், கிரிக்கெட்டை பிரதானப்படுத்தியே எடுக்கப்பட்டது. இருப்பினும் அதில் விளையாட்டை மட்டும் காண்பிக்காமல், உறவுகளின் உன்னதத்தை கச்சிதமாக கூறியிருந்தார் இயக்குனர்.
காதலர்களுக்கு இடையேயான மோதல், கணவன் மனைவிக்கு இடையேயான கருத்து வேறுபாடு, பிரிவின்போது இருக்கும் காதல், மாமியார் மருமகளுக்கு இடையேயான பாசம், மருமகன் மாமனாருக்கு இடையேயான ஈகோ என அனைத்தையுமே சரியான அளவில் கொடுத்து பிரமிக்க வைத்திருந்தார் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து.
ஒரு கிரிக்கெட் சார்ந்த கதையில் இத்தனை விஷயங்களை காட்டலாமா என்றும் அவர் வியக்க வைத்திருந்தார். எந்த ஒரு எதிர்பார்ப்புமே இல்லாமல் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த திரைப்படம், ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து பாராட்டைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழரசன் பச்சமுத்து தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக மாறினார். இருப்பினும் அவரது அடுத்த திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகாமலேயே இருந்து வந்தது.
அவர் தனுசுடன் சேரப் போவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இருப்பினும் அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் மட்டும் வரவே இல்லை. இப்படியான சூழலில் அது உறுதியாகி இருக்கிறது. இதனை தமிழரசன் பச்சமுத்துவே தெரிவித்து இருக்கிறார். அடுத்ததாக அவர் தனுசை வைத்து இயக்கும் திரைப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். ஏற்கனவே இட்லி கடை திரைப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தான் தயாரித்துள்ளார்.
தனுஷ் தற்போது, போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன்பிறகு அவர் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் சிம்புவுடன் தற்போது வெற்றிமாறன் இணைய இருப்பதால் இதன் பணிகள் தள்ளிப் போகும் என பேசிக்கொள்கிறார்கள். இதனால் தனுஷ் அடுத்ததாக தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிக்கவே வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.





