தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த லைன் அப்களில் மிகவும் பிஸியாக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். ராயன் படத்தை இயக்கிய தனுஷ் அடுத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். ராயன் படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் பிளாப் ஆனது.
அதன்பிறகு இப்போது இட்லி கடை என்ற படத்தை தனுஷ் டைரக்ட் செய்திருக்கிறார். வருகிற அக்டோபர் 1ம் தேதி அந்த படம் ரிலீஸாக உள்ளது. இதில் தனுஷ் நாயகனாக நடித்திருக்கிறார். நித்யா மேனன் சத்யராஜ் ராஜ்கிரண் அருண்விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். கடந்த ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட இந்த படம் 6 மாதங்கள் கழித்துதான் திரைக்கு வரப் போகிறது என்பது தனுஷ் ரசிகர்களுக்கு கடும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்த குபேரா படம் வருகிற ஜூன் 20ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாகர்ஜூனா முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். இதற்கிடையே தேரே இஸ்க் மெய்ன் என்ற இந்தி படத்திலும் நடிகர் தனுஷ் இப்போது நடித்து வருகிறார்.
இப்படி அடுத்தடுத்து படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகர் தனுஷ், இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்திலும் இளையராஜா கேரக்டரில் நடிக்க கடந்த ஆண்டிலேயே கமிட் ஆகி விட்டார். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் 2 பாகங்களாக இயக்கும் இந்த படமும் படப்பிடிப்பு துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன் லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் ஒரு படத்திலும், போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கும் ஒரு படத்திலும் நடிகர் தனுஷ் நடிப்பதாக ஏற்கனவே கமிட் ஆகி விட்டார். விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அறுவடை என்ற படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்குவதாகவும், அந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பதாகவும் 2 நாட்களுடன் போஸ்டருடன் அறிவிப்பு வெளியானது. அதனால் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் கைவிடப்பட்டதாக தகவல் பரவியது. ஆனால் உண்மையில் அவர்கள் இணையும் புதிய படம் கைவிடப்படவில்லை. படப்பிடிப்பு துவங்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.





