சீயான் விக்ரம் நடித்த “துருவ நட்சத்திரம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆனால் இத்திரைப்படத்தின் வெளியீடு நிதி நெருக்கடியால் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. எனினும் ஒரு வழியாக அனைத்து பிரச்சனைகளும் முடிவடைந்த நிலையில் இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளிவரும் என செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது இத்திரைப்படத்திற்கு மீண்டும் ஒரு சிக்கல் எழுந்துள்ளதாம்.

“துருவ நட்சத்திரம்” திரைப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனனே தயாரித்து இயக்கியிருந்தார். இதில் விக்ரம், ரீது வர்மா, சிம்ரன், பார்த்திபன், திவ்யதர்ஷினி போன்ற பலரும் நடித்துள்ளனர். ஹாரீஸ் ஜெயராஜ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “ஒரு மனம்”, “ஹிஸ் நேம் இஸ் ஜான்” ஆகிய பாடல்கள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் “துருவ நட்சத்திரம்” திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளிவருவதே சந்தேகம் என்று கூறப்படுகிறதாம். அதாவது டிஜிட்டல் உரிமத்தின் மூலமாக வரும் பணத்தை கொண்டு இத்திரைப்படம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை முடித்துவிடலாம் என்று கௌதம் வாசுதேவ் மேனன் நினைத்தாராம். ஆனால் அந்த பிரச்சனைகளை முடிக்க 60 கோடிகள் தேவைப்படுகிறதாம்.

“துருவ நட்சத்திரம்” திரைப்படத்தை ஹாட் ஸ்டார் நிறுவனம் 40 கோடிகளுக்கு வாங்க தயாராக இருக்கிறதாம். ஆனால் இந்த படம் குறித்த பிரச்சனைகளை முடிக்க 60 கோடிகள் தேவைப்படுவதால் கௌதம் வாசுதேவ் மேனன் 60 கோடி கேட்டிருக்கிறார். ஹாட் ஸ்டார் நிறுவனம் 40 கோடிகளுக்கு மேல் ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார்களாம். ஆதலால் கௌதம் மேனன் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்தை அணுகினாராம். அவர்கள் 60 கோடிகள் தந்து படத்தை வாங்க தயாராக இருக்கிறார்களாம். ஆனால் அவர்கள் ஒரு நிபந்தனையை விதித்தார்களாம்.
அதாவது அவர்களிடம் இந்த வருடத்திற்கான பட்ஜெட் முடிந்துப்போய்விட்டதாம், ஆதலால் அடுத்த வருடம் 60 கோடிகள் கொடுத்து படத்தை வாங்கிக்கொள்வதாக கூறினார்களாம். இந்த நிபந்தனைக்கு கௌதம் மேனன் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஆதலால் “துருவ நட்சத்திரம்” திரைப்படம் செப்டம்பரில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





