கோலிவுட் திரையுலகின் நடிப்பு அரக்கன் என்று கொண்டாடப்படுபவர் விக்ரம். அண்மையில் இவரது நடிப்பில் தங்கலான் திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்த இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக அந்த அளவு வரவேற்பு பெறவில்லை.
ஆனால் ஒட்டுமொத்தமாக படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து விட்டதாக தயாரிப்பு நிறுவனம் கூறி பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இது ஒரு பக்கம் இருக்க விக்ரமின் மகன் துருவ் விக்ரம், திரைத்துறையில் அறிமுகம் ஆகி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டியை தமிழில் ரீமேக் செய்த போது, அதில் கதாநாயகனாக அறிவிக்கப்பட்டார் துருவ். இதை இயக்குனர் பாலா எடுக்க எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது. ஆனால் பாலா, அந்தப் படத்தை சரியாக எடுக்கவில்லை என்று கூறி தயாரிப்பு நிறுவனம் கடும் அதிர்ச்சியை தெரிவித்தது.
அது மட்டுமல்லாமல், பாலாவை தூக்கிவிட்டு மீண்டும் அதே திரைப்படத்தை இயக்க முடிவு செய்து பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தது. இப்படி மீண்டும் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம், விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை. இதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது தந்தையுடன் இணைந்து மகான் திரைப்படத்தின் நடித்தார் துருவ்.
விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட இந்த திரைப்படம், ஓ டி டி தளத்தில் நேரடியாக வெளியானதால் பலருக்கு கவனத்தையும் ஈர்க்கத் தவறியது. இது இயக்குனர் மட்டுமல்லாமல் விக்ரம் மற்றும் அவரது மகனுக்கும் வருத்தத்தை கொடுத்தது. இப்படியான சூழலில் தான், மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் நடித்து வருகிறார்.
இந்தத் திரைப்படத்திற்கு பைசன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. கபடியை மையமாக வைத்து, ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டார பகுதியில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வேறு எந்த திரைப்படத்திலும் கமிட்டாகாமல் துருவ் விக்ரம் இருந்தார். இந்த நிலையில் அவர் பைசன் திரைப்படத்திற்கு பிறகு தெலுங்கு இயக்குனர் அஜய் பூபதியுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அஜய் பூபதி எடுத்த ஆர் எக்ஸ் 100 மற்றும் மங்களா வாரம் திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டானதால் இந்தக் கூட்டணி மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.





