இயக்குனர் பாலு மகேந்திராவின் பட்டறையில் இருந்து வெளிவந்த இயக்குனர்களில் மிக முக்கியமானவர் வெற்றிமாறன். தனுஷின் நடிப்பு திறமையை பார்த்து அது ஒரு கனாக்காலம் படத்தை பாலுமகேந்திரா இயக்க, அவரிடம் உதவி இயக்குனராக இருந்த வெற்றிமாறன், தனுஷை வைத்து ஒரு கதையை பட்டை தீட்டினார்.

வடசென்னையை மையமாக வைத்து ஒரு கேங்ஸ்டர் ஸ்டோரியை அவர் தயார் செய்ய, அதில் இருக்கும் பைக் திருட்டையே கதைக்களமாக கொண்டு முழு திரைப்படம் இயக்க முடிவு செய்தார் வெற்றிமாறன். இதை அடுத்து தனுஷ் – வெற்றிமாறன் இருவரும் இணைய பொல்லாதவன் திரைப்படம் வெளியானது.
2007 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், விஜய்யின் அழகிய தமிழ் மகன் படத்தோடு போட்டி போட்டு வாகை சூடியது. இதில் பின்னணி இசை, பாடல் என அனைத்திலும் மிரட்டி இருந்த ஜிவி பிரகாஷ், அட்டகாசமாக இசையமைத்து படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இதன் பிறகு மீண்டும் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி இணைய, ஆடுகளம் திரைப்படம் உருவானது.

மதுரையை கதைக்களமாக கொண்டு, சேவல் சண்டையை கருப்பொருளாக எடுத்து வெளியான இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றதும் அல்லாமல், தனுஷிற்கு தேசிய விருதையும் பெற்று கொடுத்தது. இந்தப் படத்திலும் ஜிவி பிரகாஷ் குமார் தனது கேரியரிலேயே சிறந்த இசையை கொடுத்து அசத்தினார். இதன்பிறகு, விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை முதல் பாகம் என வெற்றி திரைப்படங்களை வெற்றிமாறன் இயக்கினார்.
தற்போது அவர் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதன் படப்பிடிப்பு சிறுமலை பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வெற்றிமாறனுடன் பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் படங்களில் பணியாற்றிய இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை அளித்தார். அதில் பேசிய அவர்,
வெற்றிமாறன் இயக்கத்தில் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவான படத்தில் நடிக்க தான் ஒப்பந்தமானதாகவும், ஆனால் தயாரிப்பு நிறுவனத்திடம் ஏற்பட்ட நிதி சிக்கல் காரணமாக இந்தத் திட்டம் கைவிடப்பட்டது என்றும் கூறியிருக்கிறார். விடுதலைப் படத்தின் இரண்டாம் பாகத்தில் பிஸியாக இருக்கும் வெற்றிமாறன், அடுத்ததாக வாடிவாசல் படத்தை எடுப்பார். அவருக்கு நேரம் கிடைக்கும் போது நிச்சயம் இந்த படைப்பை படைப்பார் என்று ஜிவி பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார்.





