பசங்க திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டிராஜ். 2010 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. முழுக்க முழுக்க சிறுவர்களை மையப்படுத்தியே இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. தமிழ் சினிமா ஜானரில் மிக வித்தியாசமாக எடுக்கப்பட்ட அந்த திரைப்படம், பெரும் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து வம்சம் திரைப்படத்தை இயக்கினார் பாண்டிராஜ். தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை கொடுத்து வந்த அவருக்கு, அவ்வப்போது தோல்வி படங்களும் அமைந்தன. இப்படியான சூழலில் தான் அவருக்கு திருப்புமுனையை கொடுத்தது கடைக்குட்டி சிங்கம்.
அவருக்கு மட்டுமல்ல நடிகர் கார்த்தியின் திரையுலக பயணத்திலும் அந்த திரைப்படம் மிக முக்கியமானதாக அமைந்தது. இத்தனைக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அந்த திரைப்படம் வெளியான சூழலில், பெரும் வெற்றியை குவித்தது. தொடர்ந்து அதிரடி திரைப்படமாக வெளிவந்த அந்த சமயத்தில், குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக மாறியது கடைக்குட்டி சிங்கம்.
பிறகு சிவகார்த்திகேயனை வைத்து நம்ம வீட்டுப்பிள்ளை, சூர்யாவை வைத்து எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார் பாண்டிராஜ். இந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதியுடன் அவர் இணைந்து இருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் இதனை தயாரித்துள்ளது.
மகாராஜா எனும் பெரும் வெற்றியை கொடுத்த பிறகு, விஜய் சேதுபதி அடுத்த அடுத்த திரைப்படங்களில் ஹீரோவாக நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் அவரது 51வது திரைப்படமாக, ஏஸ் எடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 52 ஆவது திரைப்படமாக பாண்டிராஜ் உடனான படம் உருவாகி இருக்கிறது. இதில் கதாநாயகியாக நித்யா மேனன் வருகிறார்.
யோகி பாபு ஆர் கே சுரேஷ் என பெரும் கூட்டணி படத்தில் இருக்கிறது. இப்படியான சூழலில் படத்திற்கு தலைவன் தலைவி என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கணவன் மனைவியாக இருக்கும் விஜய் சேதுபதி நித்யா மேனன் தம்பதியர் சண்டை போட்டுக் கொள்வதைதான் இந்த திரைப்படம் பிரதானமாக காட்டுகிறது என்பதை அதன் டைட்டில் டீசரை பார்க்கும் போதே தெரிகிறது. பரோட்டா கடை வைத்திருக்க, அதில் இருவரும் கொத்து புரோட்டா போடும்போது வார்த்தைகளால் மோதிக் கொள்வது போன்று டீசர் இடம் பெற்று இருக்கிறது. இது ரசிகர்களின் கவனத்தையும் பெற்றுள்ளது.





