பட்டிமன்றங்களில் நகைச்சுவை பேச்சாளராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் திண்டுக்கல் லியோனி. பிறகு திமுக அனுதாபியாக மாறிய அவர், திமுக பொதுக்கூட்ட மேடைகளில் பங்கேற்று பேசி வந்தார். பிறகு அவருக்கு திமுக கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டு, இப்போது தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவராகவும் இருந்து வருகிறார்.
நெல்லையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் லியோனி பேசியதாவது, நேற்று கட்சி ஆரம்பித்த ஆட்கள் எல்லாம் இன்னும் 2 வருடத்தில் முதலமைச்சர் நாற்காலியில் அமர போகிறேன் என்று சொல்லிக்கொண்டு, நெஞ்சில் குடியிருக்கும்… என்கிறார்கள்.
நெஞ்சில் குடியிருக்கிறார்கள் என்றால், எப்போது வேண்டுமானாலும் காலி செய்து விட்டு போய்விடுவார்கள் என்றுதான் அர்த்தம். ஆனால் கருணாநிதி என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என்று சொன்னார். உடன்பிறப்புகளே என்பது ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும். நெஞ்சில் குடியிருப்பவர்கள் வாடகைக்கும் லீசுக்கும் ஓசிக்கும் கூட குடியிருப்பார்கள். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஓடிப் போய் விடுவார்கள்.
பணம் கொடுத்தால் இருப்பார்கள்;கொடுக்கவில்லை என்றால் ஓடுவார்கள். தொடங்கிய வார்த்தையே தவறாக உள்ளது. நேற்று கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் திமுக வை பார்த்து கைநீட்டி கேள்வி கேட்கிற காலம் ஆகிவிட்டது. கட்சி ஆரம்பித்த 2 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடிப்பது நடக்கிற காரியம் இல்லை. 5 நாட்களில் தொப்பை குறைய வேண்டுமா, கருப்பாக இருக்கிறீர்களா என்ற கவலை வேண்டாம் என்பது விளம்பரங்களுக்கு மட்டும்தான் நன்றாக இருக்கும்.
அரசியல் இயக்கம் தொடங்கி நீண்டகாலம் பெரிய பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் ஆட்சிக்கு வருவதை மியூசிக்கல் சேர் விளையாட்டு போல பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரே நாளில் ரோம் அரண்மனை கட்டவில்லை. அது போல் பல ஆண்டுகாலம் பல வரலாற்று சிறப்புமிக்க சந்தித்து கட்டப்பட்ட மாபெரும் இரும்புக்கோட்டை தான் திமுக என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்று லியோனி பேசியுள்ளார்.
நடிகர் விஜய் தனது சினிமா நிகழ்ச்சிகளிலும், தவெக அரசியல் மேடையிலும் என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பி என்றுதான் பேசத் தொடங்குவார். அதை விமர்சிக்கும் விதமாக, திண்டுக்கல் லியோனி நெஞ்சில் குடியிருப்பவர்கள் எல்லாம் எந்த நேரத்திலும் காலி செய்துவிட்டு போய் விடுவார்கள் என்று விஜய் குறித்து பேசியிருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





