தற்போது தமிழ் சினிமாவின் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறிவிட்டார் லோகேஷ் கனகராஜ். விஜய்யை வைத்து ஏற்கனவே மாஸ்டர் படத்தை இயக்கியுள்ள இவர் தற்போது லியோ படத்தை இயக்கி வருகிறார்.
கமலை வைத்து இவர் இயக்கிய விக்ரம் படம் இந்திய அளவில் மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற்று தமிழ் சினிமாவின் வசூலில் ஒரு மைல் கல்லை பதித்தது.இந்த நிலையில் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய லோகேஷ் கனகராஜ், அங்கு கூடியிருந்த மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அதில் ஒரு மாணவர் நான் ஷார்ட் பிலிம் ஒன்றை எடுத்துள்ளேன். ஒரு வருடம் கழித்து உங்களிடம் நான் அசிஸ்டன்டாக சேர முடியுமா என்று கேட்க, என்னிடம் நிறைய அசிஸ்டன்ட் உள்ளனர். அவர்களுக்கே என்னால் வேலை கொடுக்க முடியவில்லை என்று சிரித்தபடி கூறினார் லோகேஷ்.
அதேபோல் லியோ எல்சியு-வில் இடம் பெறுமா என்று ஒரு மாணவர் கேட்க, இன்னும் படம் வெளிவர மூன்று மாதங்கள் இருக்கிறது, அதற்குள் அனைத்து தகவல்களையும் கூறிவிட்டால் எப்படி? ஒவ்வொன்றாக வெளிவரும் என்று கூறினார்.
கைதி 2 படம் குறித்த அப்டேட்டை ஒருவர் கேட்க, நான் அடுத்ததாக ஒரு படத்தை இயக்க இருக்கிறேன். அந்த படம் முடிந்த பிறகு கைதி 2 நிச்சயம் எடுப்பேன் என்று கூறியிருந்தார் லோகேஷ் கனகராஜ். அஜித்தை வைத்து படம் இயக்கும் ஐடியா உள்ளதா என்று ஒருவர் கேட்க, வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் இயக்குவேன் என்று பதில் அளித்தார் லோகேஷ் கனகராஜ்.
அதேபோல தனது கனவு படமான இரும்புக்கை மாயாவி குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ், அந்த கதையை எழுதி 10 வருடங்கள் ஆகிவிட்டன, நிச்சயம் அதை படம் ஆக்குவேன் என்று கூறியிருந்தார்.
சில மாணவர்கள் லோகேஷ் உடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பி அவரிடம் கேட்க, அதில் ஒரு மாணவரை அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்ட லோகேஷ், நிகழ்ச்சி முடிந்த பிறகு உங்கள் அனைவரோடும் சேர்ந்து நிச்சயம் நான் புகைப்படம் எடுத்துக் கொள்வேன் அதுவரை பொறுமை காக்கவும் என்று நிதானமாக கூறினார்.





