லியோ படம் வரும் 19ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், விஜய் 68 படத்தின் படப்பிடிப்பு, கடந்த 10 நாட்களாக சென்னையில் நடந்து வருகிறது. இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில், அனிரூத் இசையில் இந்த படம் தயாராகிறது. கடந்த 2ம் தேதி பட பூஜை நடந்த நிலையில், 3ம் தேதி பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.
லியோ ஆக்ஷன் படமாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. ஏனெனில், படத்தின் டிரெய்லரிலேயே பயங்கரமாக மிரட்டி இருந்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அதனால், இதில் பரபரப்பான ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் விஜய் இரட்டை வேடம் என்றால், இன்னும் மாஸ் ஆக இருக்கும் என்பது உறுதி.
அதே வேளையில், விஜய் 68 படத்துக்கு இன்னும் பெயர் முடிவாகவில்லை. அப்பா மகன் என இரட்டை வேடங்களில் விஜய் நடிக்கும் இந்த படத்தில் சிநேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அதனால், இது ஒருவேளை பேமிலி சப்ஜெக்ட் படம் என எதிர்பார்த்த நிலையில், அதில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அதாவது விஜய் 68 படத்தில் மொத்தம் 6 சண்டைகள் இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது. அதனால், அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த படமாக இது இருக்கும் என்பது உறுதியாகி விட்டது. லியோ படம் ரிலீஸ் ஆன பிறகு, ஒரு வாரம் கழித்து வெங்கட்பிரபு, விஜய் உள்ளிட்ட படக்குழு சவுத் ஆப்பிரிக்கா செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக, தமிழ்நாட்டில் இருந்தே படக்குழுவுடன், ஸ்டண்ட் வீரர்கள் 80 பேர் கொண்ட குழுவும் சவுத் ஆப்பிரிக்கா செல்ல உள்ளது. மேலும், சவுத் ஆப்பிரிக்காவில் அங்குள்ள ஸ்டண்ட் கலைஞர்களும், படக்குழுவுடன் இணைந்துக்கொள்கின்றனர். அங்கு மிக பிரமாண்டமான மிகப்பெரிய சண்டை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
விஜய் 68 படத்தின் சண்டை பயிற்சியாளர் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், சண்டை காட்சிகளில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. சவுத் ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து ஹாங்காங், பாங்காங் உள்ளிட்ட பிற நாடுகளில் விஜய் 68 படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.





