வெற்றிமாறன், பொல்லாதவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். இவரது முதல் படமான பொல்லாதவன் படத்தில் நடிகர் தனுஷ் குத்து ரம்யா, கிஷோர், டேனியல் பாலாஜி, பானுப்பிரியா, சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த படத்துக்கு பிறகு வெற்றிமாறன், மீண்டும் தனுஷ் நடிப்பில் ஆடுகளம் படத்தை இயக்கினார். சேவல் சண்டையை மையமாக வைத்து மதுரையை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட ஆடுகளம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அதன் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை, அசுரன் போன்ற படங்களும் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றன.
இதைத்தொடர்ந்து 2023ம் ஆண்டின் துவக்கத்தில் காமெடி நடிகர் சூரியை, ஹீரோவாக வைத்து வெற்றிமாறன் இயக்கிய படம் விடுதலை. இதில் கான்ஸ்டபிள் குமரேசன் என்ற கேரக்டரில் சூரி மிக அற்புதமாக நடித்திருந்தார். இந்த படத்தில் வாத்தியார் என்ற கேரக்டரில் நடிகர் விஜய் சேதுபதி அட்டகாசமான நடிப்பை தந்திருந்தார். எதிர்பார்த்ததை போல இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
ஆனால், விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வராமல், தாமதமாகி வருகிறது. பொதுவாக ஒரு படம் எடுத்தால் அந்தப் படத்தின் அடுத்த இரண்டாம் பாகம், சில மாதங்களில் வெளிவந்தால் மட்டுமே முதல் படத்தின் தொடர்ச்சியை மறக்காமல் இரண்டாம் பகுதியை ரசிகர்களால் முழுமையாக ரசிக்க முடியும். இப்படி பல மாதங்களாகியும் தாமதம் நீடித்தால் படத்தின் மீதான ஆர்வமும், எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு வெகுவாக குறைந்து போகும்.
விடுதலை படத்தில் நடித்த சூரி, அதன் பிறகு கருடன் என்ற படத்தில் நடித்து முடித்து விட்டார். அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதேபோல் கொட்டுக்களி என்ற ஒரு படத்திலும் சூரி நடித்து முடித்து இருக்கிறார். ஆனால் வெற்றிமாறன் இன்னும் விடுதலை படத்தை 2ம் பாகத்தை முடிக்காமல் இழுத்துக் கொண்டே போகிறார் என்பது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை தருகிறது.
சமீபத்தில் வெற்றிமாறன் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் ரசிகர்கள், வடசென்னை 2 படம் எப்போது வரும் என்று கேட்டபோது, இன்னும் விடுதலை 2 படம் எப்போது வரும் என்றே எனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார். படத்தின் இயக்குனரே இப்படி கூறியிருப்பது ரசிகர்களுக்கு பலத்த அதிர்ச்சியை தந்துள்ளது. விடுதலை 2 படத்தில் நிறைய கிளை கதைகளை உருவாக்கி அதனால் ஏற்பட்ட குழப்பத்தால் வெற்றிமாறன் திணறுகிறார். அந்த குழப்பத்தில்தான் படத்தை முடிக்க சிரமப்படுகிறார் என்று தற்போது தெரியவந்துள்ளது. அந்த குழப்பங்களுக்கு அவர் தீர்வு கண்டால் மட்டுமே விடுதலை 2 வெளியாகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.





