கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் இன்னும் திரைக்கு வரவில்லை. சென்சார் பிரச்சனை காரணமாக இந்த படம் இதுவரைக்கும் ரிலீஸ் ஆகவில்லை. இதற்கு இடையே சட்டசபை தேர்தல் வந்ததால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக இந்த படம் ரிலீஸ் தாமதமானது.
இந்த சூழ்நிலையில் ஏப்ரல் முதல் மாதத்தில் இணையத்தில் ஜனநாயகன் படம் லீக் ஆனது. எச்டி தரத்தில் முழு படமும் வெளியானதால் படக்குழுவும் விஜய் ரசிகர்களும் பலத்த அதிர்ச்சியடைந்தனர். இதற்கு தமிழ் சினிமா துறை சார்ந்த பலரும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தனர். ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியாக படத்தின் எடிட்டர் தரப்பு தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
எடிட்டர் பிரதீப் ராகவ் குழுவில் இருந்து தான் படம் லீக் ஆனதாக கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது டீமில் பணியாற்றிய ஒப்பந்த எடிட்டர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஜனநாயகன் படத்தின் எடிட்டர் பிரதீப் ராகவை தங்கள் சங்கத்திலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்வதாக சினிமா எடிட்டர் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து எடிட்டர் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ் தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கத்தின் சட்ட விதிகளை மதிக்காமல் தொடர்ந்து ஜனநாயகன் உட்பட தான் பணியாற்றும் அனைத்து திரைப்படங்களுக்கும் சங்க உறுப்பினர் அல்லாதவர்களை உதவியாளராக பயன்படுத்துவது சங்க செயற்குழு முன்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு சங்கத்தின் சட்ட விதிகளுக்கு எதிரானது. மேலும் ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் சட்ட விரோதமாக வெளியாக நேரடியாக பிரதீப் ராகவ் காரணமில்லை என்றாலும் அவரது கவனக்குறைவே காரணமாக அமைந்துள்ளது என்பதை அவர் ஒப்புக்கொண்டு உள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க வேண்டி உள்ளது.
ஏப்ரல் 17 அன்று நடந்த அவசர செயற்குழு கூட்டத்தில் பிரதீப் ராகவை தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கம் இடைநீக்கம் செய்து இந்த அறிவிப்பை வெளியிடுகிறது. இந்த இடை நீக்க காலத்தில் சங்கம் அவருக்கு எந்த ஒத்துழைப்பும் வழங்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





