தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராகவும் நல்ல குணச்சித்திர நடிகராகவும் வலம் வருபவர் அமீர். அவர் இயக்கிய மௌனம் பேசியதே ராம் பருத்திவீரன் போன்ற படங்கள் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் சூப்பர் ஹிட் படங்களாக இருக்கின்றன.
நடிகர் கார்த்தி இதுவரை 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் பருத்திவீரன் படம் தான் அவருக்கு இப்போதும் மிகப்பெரிய அடையாளமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் அமீர் தொடர்ந்து அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த பார்வையில் தனது கருத்துக்களை அவ்வப்போது முன்வைத்து வருகிறார்.
குறிப்பாக தற்போது நடந்து வரும் தவெக ஆட்சி குறித்தும் முதல்வர் விஜயின் செயல்பாடுகள் குறித்தும் அவ்வப்போது இயக்குனர் அமீர் தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார். இந்த சூழலில் நேற்று தமிழக முதல்வர் விஜய் கரூருக்கு சென்று பொதுமக்கள் மத்தியில் கூட்டத்தில் பேசினார். அப்போது கரூர் சம்பவத்திற்கு முழுக்க முழுக்க திமுக தான் காரணம் என்ற அடிப்படையில் அவரது கருத்துக்களை முன் வைத்தார்.
அன்று இருந்த கரூர் போலீசார் திட்டமிட்டு தன்னை அந்த கூட்டத்துக்கு வரவழைத்து விட்டதாகவும் அவர்கள் நடத்துவது நாடகம் என்று தெரியாமல் நம்பி வந்து ஏமாந்து விட்டதாகவும் பேசினார். மேலும் எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் வந்திருக்கிறது என்று எங்களிடம் போலீசார் முன்பே சொல்லி இருக்கலாம் அல்லது அந்த கூட்டத்தையே ரத்து செய்து இருக்கலாம்.
ஆனால் அதையெல்லாம் செய்யாமல் கடைசியில் என் மீது பழி போட்டு விட்டார்கள் என்று முதல்வர் விஜய் பேசியது இப்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் திரைப்பட இயக்குனர் அமீர் தனது வாட்ஸ்சப் ஸ்டேட்டஸில் ஒரு முக்கிய பதிவை செய்திருக்கிறார். அதில் அமீர் கூறியிருப்பதாவது, இறந்த 41 பேர் குடும்பத்தினரும் இன்று அந்த கூட்டத்தில் கைதட்டி மகிழ்ந்தார்களா?
உங்கள் கைகளில் காவல்துறை இருந்தும் இன்னும் குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. மக்களை முட்டாளாக்கும் இந்த கோயபல்ஸ் தத்துவம் இன்னும் எத்தனை ஆண்டுகள் தொடரும் என்று தெரியவில்லை என இயக்குனர் அமீர் பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





