இயக்குனர் அமீர் நடிகராகவும் இருந்து வருகிறார். அவரை போல பல இயக்குனர்கள் நடிகர்களாக மாறியிருக்கின்றனர். அந்த வரிசையில் சேரன் பார்த்திபன் மிஷ்கின் என பலரை குறிப்பிட்டுச் சொல்லலாம். இயக்குனர்கள் நடிகர்களாகி ஜெயிக்கும் நிலையில் நடிகர்கள் இயக்குனர்களாகி ஜெயிப்பது குறைவாக தான் உள்ளது.
தயாரிப்பாளர் எஸ் தாணு தயாரிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான படம் டிரெயின். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இந்த படத்துக்காக ஒரு பாடலும் பாடியிருக்கிறார்.
மேலும் இந்த படத்தில் மிஷ்கினுடன் நாசர் நரேன் கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். டிரெயின் திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட இயக்குனர் அமீர், இயக்குனர் மிஷ்கின் குறித்து பேசியிருக்கிறார்.
அப்போது இயக்குனர் அமீர் பேசியதாவது, மிஷ்கின் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய இயக்குனர் கிடையாது. தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு பாதையை அமைத்துக் கொண்டவர்தான் மிஷ்கின். தன்னை பொதுவெளியில் காட்டிக் கொள்வதிலும் சரி படம் எடுப்பதிலும் சரி தனக்கென்று ஒரு தனி பாணியை அவர் வைத்திருக்கிறார்.
விமர்சனங்கள் வைக்கும் போது நான் இப்படித்தான் என்று அதை எதிர்கொள்வதில் மிஷ்கினுக்கு முதன்மை இடம் உண்டு. அவருடைய அடுத்த அடுத்த படங்களுக்கு என்னை அழைத்துச் சென்று நடனம் ஆட வைத்தார். மிஷ்கின் இப்படியும் நடிப்பாரா என்று சொல்லும் அளவுக்கு ஆச்சரியப்பட வைக்கிறார்.
எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் படங்களில் ரசிகர்களின் கண் அவர்களை மட்டுமே பார்க்கும். அதே மாதிரி தான் விஜய் படங்களும். ஆனால் விஜய் படத்திலேயே அருகில் இருப்பவர்களை பார்க்க வைத்தது இரண்டே பேர் தான். ஒருவர் விஜய் சேதுபதி மற்றொருவர் மிஷ்கின். இசையிலும் மிஷ்கின் சிறப்பாக பணியாற்றுகிறார். எனக்கு தெரிந்து டி ராஜேந்தர் சாருக்கு பிறகு மிஷ்கின் தான் என்று நினைக்கிறேன் என்று அமீர் அந்த விழாவில் பேசியிருக்கிறார்.





