தமிழில் பல வெற்றிப் படங்களை தந்தவர் இயக்குனர் ஏஆர் முருகதாஸ். ஹீரோவை நம்பாமல் கதையை நம்பி படம் எடுக்கும் சில இயக்குனர்களில் இவரும் ஒருவர். ரமணா கஜினி கத்தி சர்கார் துப்பாக்கி ஏழாம் அறிவு போன்ற சூப்பர் ஹிட் படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்து பலத்த வரவேற்பை பெற்றவர்.
சமீபத்தில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் இந்தியில் வெளியான படம் சிக்கந்தர். சல்மான்கான் ராஷ்மிகா மந்தனா சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை. இந்த படம் தியேட்டரில் ரிலீஸாவதற்கு ஒரு நாள் முன்பே பைரசி இணையதளத்தில் வெளியாகி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்தாண்டில் சிக்கந்தர் படத்தை இயக்க பாலிவுட் நடிகர் சல்மான் கான் இயக்குனர் ஏஆர் முருகதாஸை அழைத்த போது, அவர் தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் ருக்மணி வசந்த் நடிப்பில் மதராஸி என்ற படத்தை இயக்கிக் கொண்டு இருந்தார். அப்போது சல்மான்கான் திடீர் அழைப்பு விடுத்ததால், இந்த படத்தின் படப்பிடிப்பை அப்படியே நிறுத்திவிட்டு மும்பைக்கு சென்றுவிட்டார்.
அதே நேரத்தில் அமரன் படத்தில் கமிட் ஆகியிருந்த நடிகர் சிவகார்த்திகேயனும் இதனால் பாதிப்பின்றி கடந்தாண்டில் அமரன் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டார். சிவகார்த்திகேயனுடன் சாய்பல்லவியும் நடித்திருந்த இந்த படம் கடந்தாண்டில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. 100 நாட்களும் ஓடிய நிலையில் ரூ. 325 கோடிக்கு மேல் உலகளவில் வசூலிலும் சாதனை படைத்தது.
சிக்கந்தர் படம் போதிய வரவேற்பை பெறாத நிலையில், தனது படக்குழுவுடன் சென்னை திரும்பிய இயக்குனர் ஏஆர் முருகதாஸ் முக்கிய முடிவு எடுத்திருக்கிறார். அதன்படி மதராஸி படத்தின் மீதி ஷூட்டிங்கை 25 நாட்களுக்குள் முடித்துவிட திட்டமிட்டுள்ளார்.
அதில் 15 நாட்கள் மட்டுமே நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டிய காட்சிகள் பாக்கி உள்ளதால் அதை முதலில் ஷூட் செய்ய உள்ளார். அதன்பிறகு 10 நாட்களில் படத்தில் விடுபட்ட மற்ற காட்சிகள் மற்றும் பேட்ச் ஒர்க் பணிகளை முடித்துவிட்டு போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகளை துவங்க உள்ளார். அதன்பிறகு டப்பிங் பணிகளை நிறைவு செய்து படத்தை ரிலீஸ் செய்யும் ஏற்பாடுகளை செய்ய ஏஆர் முருகதாஸ் முடிவு செய்திருக்கிறார்.





