தமிழ் சினிமாவில் ஸ்டார் ஹீரோக்களை நடிக்க வைத்து ஆக்ஷன் படங்களை இயக்கி கமர்ஷியல் என்ற பெயரில் கோடி கோடியாக சம்பாதிக்கும் இன்றைய சில இயக்குனர்களுக்கு மத்தியில் சமூக பொறுப்புணர்வுடன் நல்ல படங்களை தரும் சில இயக்குனர்களும் இருக்கவே செய்கின்றனர். அவர்களில் ஒருவராக இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இருக்கிறார்.
விஜயகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கிய ரமணா படம், விஜய் நடித்த கத்தி படம் சூர்யா நடித்த ஏழாம் அறிவு போன்ற படங்களில் நல்ல சமூக கருத்துகள் இருந்தன. விஜய் நடித்த சர்கார் படத்தில் ஏஆர் முருகதாஸ் இன்றைய அரசியலை அப்பட்டமாக படம் பிடித்து காட்டியிருந்தார்.
இப்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் இந்தி நடிகர் சல்மான்கான் ராஷ்மிகா மந்தனா சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த சிக்கந்தர் படம் வருகிற 30ம் தேதி ரிலீஸாக உள்ளது. அதே போல் தமிழில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ருக்மணி வசந்த் நடிப்பில் மதராஸி என்ற படமும் உருவாகி வருகிறது.
கடந்த 2005ம் ஆண்டில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த படம் கஜினி. அசின் நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதே படத்தை கஜினி என்ற டைட்டிலேயே ஏஆர் முருகதாஸ் இந்தியிலும் ரீ மேக் செய்தார். அதில் சூர்யா நடித்த சஞ்சய் ராமசாமி கேரக்டரில் இந்தி நடிகர் அமீர்கான் நடித்திருந்தார். இந்தியில் வெளியான அந்த படமும் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக இயக்குனர் ஏஆர் முருகதாஸிடம் கஜினி 2 படம் எப்போது உருவாகும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் சிக்கந்தர் படம் பிரமோ நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் ஏஆர் முருகதாஸ் அதற்கு பதில் தந்திருக்கிறார். இதுகுறித்து ஏஆர் முருகதாஸ் கூறியதாவது, கஜினி 2 படத்தை இயக்குவது குறித்து ஆலோசித்து வருகிறேன்.
தெலுங்கு படத் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் இந்த படத்தை தயாரிக்க உள்ளார். அதற்கான சரியான நேரம் வரும்போது கஜினி 2 படத்தை இயக்குவேன். கஜினி 2 படத்தை தமிழ் மற்றும் இந்தி என 2 மொழிகளிலும் ஒரே நேரத்தில் இயக்குவேன் என்று இயக்குனர் ஏஆர் முருகதாஸ் கூறியிருக்கிறார். தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், ஐகான் ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.





