ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் அட்லி, பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை எடுத்துள்ளார். இதில், விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஜவான் படத்தின் ப்ரீ ஈவென்ட் விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் நடிகர் ஷாருக்கான், அட்லி, விஜய் சேதுபதி, அனிருத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அட்லி, “எல்லோருக்கும் வணக்கம் நண்பா… இந்தப் படம் இவ்வளவு தூரம் நடந்திருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் என்னோட அண்ணன் என்னோட தளபதி விஜய் சார். அவரோட புண்ணியத்தால நம்ம ஆறு மாசம் வேலை பார்த்து, ஏழாவது மாசத்துல ரிலீஸ் பண்ணி ஜாலியா வாழ்ந்துட்டு இருந்தோம். எப்போ எனக்கு ஜவான் வாய்ப்பு கிடைச்சுதோ, அப்பவே கொரோனாவும் வந்துருச்சு.
நான் எதிர்பார்த்ததை விட இந்த படம் ரொம்ப நாள் டைம் எடுத்துக்கிச்சு. ஆனால் நான் தளபதியோட விசுவாசமான ரசிகன். கொடுத்த வாக்கை மீற மாட்டேன். அதனாலதான் இந்த படம் நான் எதிர்பார்த்ததை விட பெரிய அளவில் வந்திருக்கு. இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்ததற்கு ஷாருக்கான் சாருக்கு மிக்க நன்றி. 13 ஆண்டுகளுக்கு முன்னால், ஷாருக்கானின் வீட்டின் கேட் முன்பு நின்று போட்டோ எடுத்துக் கொண்டேன். ஆனால் இன்று, அவரிடம் கதையை கூற செல்லும் போது அந்த கேட் எனக்காக திறந்திருக்கிறது. ஷாருக்கான் சார், எனக்கு தந்தைக்கு ஒரு படி மேலானவர். என் தலைவன் விஜய் சொன்னமாதிரி, நெகட்டிவிட்டிய எல்லாரும் தவிர்த்திருங்க.
நீ ரொம்ப தலைக்கனத்தோட பேசுற, அதீத நம்பிக்கையோட பேசுறனு, என் நண்பர்கள் எல்லாரும் அடிக்கடி கூறுவார்கள்.அப்போது நான் அவர்களிடம் கூறுவேன், அனைத்தையும் என் இதயத்தில் இருந்து பேசுகிறேன் என்று. இதுல கனெக்ட் ஆகின்றவன் கனெக்ட் ஆகிப்பான். நீங்கள் என்னை மிகவும் விரும்புகிறீர்கள் என்று எனக்கு தெரியும்.
அனிருத்தை பார்க்கும் போதெல்லாம், ஷாருக்கான் சாரிடம் பாடலை போட்டு காட்ட வேண்டும். அதனால், ஜவான் பாட்டை முழுவதுமாக சீக்கிரம் செய்து முடிக்க கூறுவேன். என்ன தல இந்தா பண்ணி தாரேன் என உடனே அனிருத் கூறுவான். பள்ளிக்கூடத்தில் இருக்கும் நண்பனை போன்றவன்தான் அனிருத். எப்போதும் வீட்டு பாடத்தை முடிக்கவே மாட்டான். கேட்டால், விடு மச்சி நாளைக்கு பாத்துக்கலாம் என்று கூறுவான்.
நான் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி பெறலாம் அல்லது தோல்வியடையலாம். ஆனால் எப்போதும் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகும் முயற்சியை மேற்கொண்டே இருப்பேன். இப்போது எனக்கு எல்லாமே புதிதான ஒரு விஷயம். பாலிவுட்டில் புதிய மக்கள், புதிய பணியை மேற்கொண்டு உள்ளேன்” என்று பேசினார். வரும் செப்டம்பர் 7ஆம் தேதி ஜவான் திரைப்படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.





