இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஸ்ரீ திவ்யா சூரி சத்யராஜ் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்து சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வரவேற்பை அடையாளத்தை தமிழ் சினிமாவில் பெற்றுத் தந்தது. இந்த படத்துக்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்த நிலையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் சிவகார்த்திகேயனுக்கு மட்டுமின்றி நடிகர் சூரிக்கும் அவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது. இதன் பிறகுதான் பல முன்னணி நடிகர்களுடன் அவர் காமெடி ரோலில் அதிகமாக நடித்து காமெடி நடிப்பில் முக்கிய இடத்தை பிடித்தார். பிறகு கதாநாயகனாகவும் மாறினார்.
இந்த படத்தில் இடம்பெற்ற ஊதாக்கலரு ரிப்பன் யாரு உனக்கு அப்பன் என்ற பாடல் பெரிய அளவில் ஹிட் ஆனது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் பாடியிருந்தார். ஹீரோயிசம் இல்லாத ஒரு பட்டதாரி வாலிபரான சிவகார்த்திகேயன், காதலை எதிர்க்கும் ஊர் நாட்டாமை சத்யராஜ் மகளை காதலிப்பதுதான் கதை. கடைசியில் அந்த காதலை சேர்த்து வைத்ததே சத்யராஜ்தான் என்ற டிவிஸ்ட்டுடன் படம் முடிவடையும்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் வெற்றிக்கு பிறகுதான் ஜாலியான காதல் காமெடி படங்கள்தான் தனக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தருகிறது என்பதை தெரிந்துக்கொண்ட சிவகார்த்திகேயன், தொடர்ந்து இதே ஜானரில் கதைகளை தேர்வு செய்து நடித்து முக்கிய இடத்துக்கு சிவகார்த்திகேயன் வந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.
இயக்குனர் எஸ் எழில் இயக்கத்தில் நடிகர் விமல் நடித்த படம் தேசிங்கு ராஜா. இந்த படத்தின் இசையமைப்பாளரும் டி இமான்தான். இந்த படத்தில்தான் நடிகர் விமலுக்காக ஊதாக்கலரு ரிப்பன் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இயக்குனர் எழில், இந்த பாடல் தனக்கு பிடிக்கவில்லை என்று கூறி அந்த பாடலை நிராகரித்து விட்டார்.
ஆனால் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துக்கு இசையமைத்த போது இந்த பாடல் மற்றும் டியூனை கேட்டு ரசித்த அந்த படத்தின் இயக்குனர் பொன்ராம், இந்த பாடலை தனது படத்தில் சேர்க்க வேண்டும் என்று அதற்கான காட்சியை உருவாக்கி, நடிகர் சிவகார்த்திகேயனை பாட வைத்தார். பாடல் பெரிய அளவில் ஹிட் ஆகி விட்டது. நடிகர் விமலுக்கு கிடைத்திருக்க வேண்டிய சூப்பர் ஹிட் பாடலை, சிவகார்த்திகேயனுக்கு டைரக்டர் எழில் விட்டு கொடுத்துட்டார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.





