எச்சில் கையால் கூட காக்கா ஓட்ட மாட்டார்கள் என்று பழமொழி தமிழக மக்கள் மத்தியில் கூறப்படுவதுண்டு. அதாவது மற்றவர்களுக்கு உதவாமல் காசு விஷயத்தில் கஞ்சனாக இருப்பவர்களுக்காக இந்த பழமொழியை உதாரணமாக சொல்வார்கள். அப்படிப்பட்ட பழமொழிக்கு மிகவும் சிறந்த உதாரணங்களாக தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் இருக்கவே செய்கின்றனர்.
இவர்கள் சினிமாவில் நடிக்க லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவார்கள். ஆனால் கஷ்டப்படும் மக்களுக்காக ஒரு ரூபாய் கூட செலவு செய்ய முன்வர மாட்டார்கள். சினிமாவில் மட்டுமே ஏழைகளுக்காக போராடும் இந்த நடிகர்கள் உண்மையில், கண் எதிரில் கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு ஒரு ரூபாய் செலவு செய்ய மாட்டார்கள்.
உதாரணமாக அவர்கள் கலந்துக்கொள்ளும் படப்பிடிப்பு தளங்களிலேயே யூனிட் வேலை செய்யும் வயதானவர்கள், ஏழை தொழிலாளர்கள் கண் எதிரில் கஷ்டப்படுவதை நேரில் பார்ப்பார்கள். நான் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்துக்காக தானே இவர்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள் என ஒரு நிமிடம் கூட ஒரு இரக்க உணர்வோ, கருணை எண்ணமோ, உதவும் குணமோ அவர்களிடம் எட்டிப் பார்க்காது.
ஆனால் சினிமாவில் இன்னும் நிஜ கர்ணன்களாக சில நடிகர்கள் இருக்கவே செய்கின்றனர். அன்று அந்த நிலையில் இருந்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். பிறகு அவரது பாணியில் மற்றவர்களுக்கு உதவியவர் நடிகர் கேப்டன் விஜயகாந்த். இப்போது அந்த வரிசையில் நடிகர்கள் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சிலம்பரசன் போன்றவர்களை சொல்லலாம். இவர்களின் கவனத்துக்கு சென்றால் நிச்சயம் உதவுவார்கள்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்து வருபவர் தெனாலி. இவரது மகன் வின்னரசன், எம்ஜிஆர் பல்கலை கழகத்தில் பிசியோதெரபி படித்து வருகிறார். போதிய சினிமா வாய்ப்புகள் சமீபகாலமாக இல்லாத சூழலில், நடிகர் தெனாலியால் தனது மகனின் படிப்புக்கான கட்டணத்தை கட்ட முடியாமல் சிரமப்பட்டுள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்த நடிகர் விஜய் சேதுபதி, காமெடி நடிகர் தெனாலி மகன் வின்னரசன் செலுத்த வேண்டிய கல்லூரி கட்டணம் ரூ. 76 ஆயிரம் ரூபாயை கட்டியுள்ளார். மேலும் அவரது மகன் வின்னரசன் மற்றும் நடிகர் தெனாலியை சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நடிகர் விஜய் சேதுபதி செய்த இந்த உதவியை என்றைக்குமே வாழ்நாளில் மறக்க மாட்டோம், என்று உருக்கமாக கூறியுள்ளனர்.





