இயக்குநராக தமிழ் சினிமாவுக்குள் வந்தவர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி என்ற முதல் படத்திலேயே, ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றார். தொடர்ந்து துப்பறிவாளன், பிசாசு, பிசாசு 2, சைக்கோ, முகமூடி, யுத்தம் செய், அஞ்சாதே என பல படங்களை தந்து, ரசிகர்களின் அபிமான இயக்குநராக மாறினார். மிஷ்கின் படங்கள் என்றாலே, ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைக்கிறது.
இயக்குநராக மட்டுமின்றி சவரக்கத்தி, ஓ நந்தலாலா, மாவீரன், லியோ உள்ளிட்ட படங்களில் நடித்து, தன்னை ஒரு சிறந்த நடிகராகவும் வெளிப்படுத்தினார். அதிலும் லியோ படத்தில், இன்னும் மிஷ்கின் பல காட்சிகளில் நடித்திருக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு அவரது நடிப்பு மிரட்டலாக இருந்தது.
மிஷ்கின் படங்களை பொருத்த வரை, அவரது படங்களில் பல வித்யாசமான அனுபவங்களை ரசிகர்களுக்கு தருகிறார். வன்முறை அதிகம் போல தோன்றினாலும், அதில் காட்டப்படும் விஷயங்கள் மனிதனின் முரண்பட்ட உணர்வுகளை, அதற்கான காரணங்களை அந்த படைப்புகள் வெளிப்படுத்தவே செய்கின்றன.
இப்போது, டெவில் என்ற படத்தை தயாரித்து இருக்கும் மிஷ்கின் அந்த படத்தில் நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் இசை அமைப்பாளராகவும் புது அவதாரம் எடுத்து இருக்கிறார். இதன் ஆடியோ லான்ச் சமீபத்தில் நடந்தது. இதில் டைரக்டர் பாலா, டைரக்டர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
இவ்விழாவில் டைரக்டர் மிஷ்கின் பேசியதாவது, உலகில் மிகச் சிறந்த கலைஞன், சினிமாவுக்காக வாழ்பவர் ராம். இந்த விழாவுக்கு என் இனிய நண்பர் ராம் வரவில்லையே என்று அவரை மிகவும் மிஸ் செய்கிறேன். அவரது ஏழு மலை, ஏழுகடல் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்.
என் இதயத்தை எப்போதுமே தூய்மைப்படுத்திக் கொண்டு இருக்கிற, அந்த பெயரை சொன்னாலே எனக்கு சந்தோஷம் தருகிற, சினிமாவில் மிக முக்கியமான கலைஞன் தியாகராஜன் குமார ராஜா. இன்று காலை 3 மணிக்கு போன் செய்தார். ஒண்ணு சொல்றேன், தப்பா நினைக்காதீங்க என்றார். நீங்க விழாவுக்கு வரலை, அதானே என்றேன். ஆமாம், சங்கோஜமா இருக்குது, என்றார். அப்போ வராதடா என்று கூறிவிட்டேன், அந்தளவுக்கு எங்கள் நட்பு உரிமையானது. பூவை போன்ற மிக மென்மையான மனிதர் அவர் என்று கூறி இருக்கிறார் மிஷ்கின்.





