இயக்குனர் பாலுமகேந்திராவின் சீடர்களில் ஒருவர் இயக்குனர் பாலா. நடிகர் விக்ரம் நடித்த சேது படம் மூலம் கடந்த 1999ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் இயக்குனராக நுழைந்தார். 25 ஆண்டுகள் கடந்தும் இன்னும் 10 படங்களை கூட பாலா இயக்கவில்லை என்பது மிகவும் கவனிக்கத்தக்கது. ஆனால் அவர் இயக்கிய படங்கள் எல்லாமே பேசக்கூடிய படங்கள்தான்.
பாலா இயக்கிய முதல் படம் சேது மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் சியான் விக்ரம் என்ற அற்புதமான நடிகரையும் பாலா தமிழ் சினிமாவுக்கு அடையாளப்படுத்தினார். நடிகர் சூர்யாவின் முழுமையான நடிப்பு பரிமாணம் வெளிப்பட்டது பாலா இயக்கிய நந்தா படத்தில் தான்.
தொடர்ந்து நான் கடவுள் அவன் இவன் நாச்சியார் பிதாமகன் பரதேசி தாரை தப்பட்டை வணங்கான் என பாலாவின் படங்கள் ஒவ்வொன்றும் வேறு விதமான களத்தில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டவை. ஆனால் அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பாலாவின் வணங்கான் படம் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய இயக்குனர் பாலா கூறியதாவது, விஜி சந்திரசேகர் மேடம். நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன். மதயானை கூட்டம் படம் பார்த்ததற்கு அப்புறம் அதில் ஒரு காட்சி வரும். அந்த பையனை கொன்னுட்டு அவனை கொன்னதுக்கு அப்புறம் அந்த ரத்தத்தை துடைச்சிட்டு கண் விழிகளை உருட்டி உருட்டி பக்கத்தில் இருக்கிற 2 பேரை பார்ப்பீங்க.
அப்போது மனசுல இருக்கிற உங்க உணர்வுகளை அந்த கண் பார்வையில் வெளிப்படுத்துவீங்க. அது வந்து நூத்துல ஒருத்தருக்கு தான் வரும். எனக்கு பிடித்த நடிகை ராதிகா மேடம்தான். அதுக்கு அடுத்து விஜி மேடம் என்று சொல்லிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன் என்று வெளிப்படையாக பேசினார்.
கிழக்குச் சீமையிலே படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக பரிசல் ஓட்டும் பெண்ணாக நடித்தவர் விஜி சந்திரசேகர். அழகி என்ற சீரியலிலும் அவரது அம்மா கேரக்டர் பேசப்பட்டது. பல படங்களில் அம்மா கேரக்டரில் விஜி சந்திரசேகர் நடித்து வருகிறார். மதயானை கூட்டம் மருத கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் அவரது நடிப்பு பெரிய அளவில் கவனம் பெற்றது.





