இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான வணங்கான் படம் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பாராட்டை பெற்றுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி கடந்த 10ம் தேதி வெளியான இந்த படத்தில் அருண் விஜய் நாயகனாக வாய் பேசாத கேரக்டரில் நடித்திருந்தார். அவரது நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
சேது படம் மூலம் இயக்குனரான பாலா தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். ஆனால் 10க்கும் குறைவான படங்களை தான் அவர் தந்திருக்கிறார். நந்தா நான் கடவுள் பரதேசி அவன் இவன் பிதாமகன் தாரை தப்பட்டை ஆகிய படங்களை தொடர்ந்து இப்போது வணங்கான் படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
சசிக்குமார் வரலட்சுமி சரத்குமார் நடித்த தாரை தப்பட்டை படம், கடந்த 2016ம் ஆண்டில் வெளியானது. இளையராஜா இசையமைத்த 1000வது படம் இது என்ற சிறப்புக்குரியது. இந்த படத்துக்கு பிறகு 8 ஆண்டுகள் கழித்துதான் வணங்கான் படம் பாலா இயக்கத்தில் வெளிவந்துள்ளது. இப்படி 3 ஆண்டுகள், 5 ஆண்டுகள், 8 ஆண்டுகள் என நீண்ட இடைவெளியில்தான் பாலா படங்கள் வெளியாகிறது.
25 ஆண்டுகளில் 10க்கும் குறைவான படங்கள் இயக்க நான்தான் காரணம். அவ்வளவு அவசரமாக அடுத்தடுத்த படங்களை எடுத்து என்ன ஆகப் போகிறது, இன்னும் கொஞ்சம் பொறுமையாக நிதானமாக எடுப்போம் என்ற என்னுடைய மனநிலையே இதற்கு காரணம் என்று சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் பாலாவே கூறியிருக்கிறார்.
வணங்கான் படத்தை ஒரு தரப்பு பாராட்டினாலும், இதுபோன்ற படங்கள் 1980களிலேயே வந்திருக்கின்றன. பெண்களை கற்பழிக்கும் வில்லன்களை ஹீரோ பழிவாங்குவது எல்லாம் அப்போதே நிறைய வந்துவிட்டன. இதில் பாலாவின் வழக்கமான பாணி இல்லை என்றும் குறை சொல்கின்றனர். எனினும் வணங்கான் படம் ரூ. 10 கோடி வசூலை கடந்துள்ளது.
வணங்கான் படத்தை தொடர்ந்து, இயக்குனர் பாலா தனது அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார் என்ற தகவல் இப்போது கிடைத்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த என்ஆர்ஐ தயாரிக்கும் இந்த படத்தில் இயக்குனர் பாலாவின் சம்பளம் ரூ. 8 கோடி வரை பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் படத்தில் ஹீரோ ஹீரோயின் கதை படத்தின் பட்ஜெட் குறித்து இன்னும் எதுவும் முடிவாகவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.





