சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய், இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவக்கி, அதன் தலைவராக இருக்கிறார். கட்சிக்கொடி அறிமுகம், கட்சி பாடல் வெளியீடு செய்ததை தொடர்ந்து, வரும் அக்டோபர் 27ம் தேதி, அரசியல் மாநாட்டை நடத்தவும் உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலை என்ற கிராமத்தில் வருகிற அக்டோபர் 27ம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில அரசியல் மாநாடு நடைபெற உள்ளது. இதில் தனது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், எதிர்கால திட்டங்கள் குறித்து விஜய் பேச இருக்கிறார். அதனால் இந்த மாநாடு அரசியல் முக்கியத்துவம் பெற்றதாக மாறியுள்ளது.
விஜயின் அரசியல் வருகை குறித்து பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வந்தாலும், திமுக மற்றும் அதிமுக திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய மாற்றம் ஏற்படுவதை மக்கள் விரும்பவே செய்கின்றனர். அதனால் விஜயின் வருகை, நிச்சயம் வரவேற்பை பெற்றிருப்பதை மறுக்க முடியாது. ஆனால் அந்த வரவேற்பு முதல்வர் பதவியை பெற்றுத் தருமா என்பதில் சந்தேகமே நீடிக்கிறது.
நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் சீமான் போன்றவர்கள் மக்களின் மத்தியில் செல்வாக்கு பெற்றவர்களாக இருந்தாலும் திரைக்கலைஞர்களாக அவர்களை ஏற்றுக்கொண்ட மக்கள், அரசியல் தலைவர்களாக அங்கீகரிக்க முன்வரவில்லை. சீமான் இன்னும் ஒவ்வொரு தேர்தலிலும் தனித்து போராடி தோற்றுக்கொண்டு இருக்கிறார். கமல்ஹாசன் ஒரு கட்டத்துக்கு பிறகு திமுகவுக்கு ஜால்ரா அடிக்க துவங்கி விட்டார்.
மெட்டி ஒலி சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகர் போஸ் வெங்கட். சிவாஜி, தேவராட்டம், கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்த போஸ் வெங்கட், இப்போது விமல் நடித்துள்ள சார் என்ற படத்தை இயக்கியும் உள்ளார். தற்போது படத்தின் பிரமோ நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கும் நடிகர், இயக்குனர் போஸ் வெங்கட் விஜய் அரசியல் பயணம் குறித்து தனது கருத்துகளை கூறியிருக்கிறார்.
போஸ் வெங்கட் கூறியதாவது, விஜய் மிகவும் தவறான நேரத்தில் அரசியலுக்கு வந்திருக்கிறார். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது கல்வியிலும் பொருளாதாரத்திலும் தமிழகம் ஏற்கனவே முன்னாக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அதனால் இன்னும் 20 ஆண்டுகளுக்கு, அதாவது குறைந்தது நான்கு தேர்தலுக்கு பிறகுதான் விஜய்க்கான வெற்றி வாய்ப்பு இருக்கிறது. சீமான் போன்றவர்கள் அதிமுக, திமுக கட்சிகளை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு தனித்து பல ஆண்டுகளாக போராடி வருகிறார். எனக்கும் சீமானுக்கும் அரசியல் கருத்து வேறுபாடு இருந்தாலும் ஒரு அரசியல் தலைவராக அவரை நான் மதிக்கிறேன். விஜய் இந்த சூழலில் அரசியலுக்கு வந்துள்ளதால் அவருக்கும் இதே நிலைதான் ஏற்படும், என்று கூறியிருப்பது வைரலாகி வருகிறது.





