தமிழ் சினிமாவில் பாரதி கண்ணம்மா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சேரன். தொடர்ந்து பொற்காலம் இன்னொரு தேசியகீதம் வெற்றிக்கொடி கட்டு ஆட்டோகிராப் தவமாய் தவமிருந்து பொக்கிஷம் மாயக்கண்ணாடி உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். பிரிவோம் சந்திப்போம் ராமன் தேடிய சீதை சொல்ல மறந்த கதை யுத்தம் செய் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.
அதே போல் அவர் இயக்கிய ஆட்டோகிராப் தவமாய் தவமிருந்து பொக்கிஷம் போன்ற படங்களில் அவரே நாயகனாகவும் நடித்தார். 21 ஆண்டுகள் ஆன நிலையில் வருகிற மே மாதம் ஆட்டோகிராப் படத்தை சேரன் ரி ரிலீஸ் செய்ய உள்ளார். சமீபத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் ஆட்டோகிராப் படம் டிரெய்லரை சேரன் வெளியிட்டு ரசிகர்களை அசத்தியிருக்கிறார்.
இயக்குனர் சேரன், ஆரம்பத்தில் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமாருடன் பல படங்களில் உதவி இயக்குனராக பணிசெய்திருக்கிறார். அதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் கூறியதாவது, கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய சேரன் பாண்டியன் படம் முதல் நாட்டாமை படம் வரை பல படங்களில் நடிகர் விஜயகுமார் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.
சேரன் பாண்டியன் படப்பிடிப்பில் நடிகர் விஜயகுமார் மனைவி மஞ்சுளாவுக்கும் எனக்கும் சண்டை வந்துவிட்டது. அவர் சமையல்கட்டில் நிற்பது போன்ற காட்சிக்கு பட்டுப்புடவை கை மற்றும் கழுத்து நிறைய நகைகள் தலைநிறைய பூ வைத்து அம்மன் போல நிற்கிறார். இந்த காட்சியில் இப்படி நீங்கள் இருக்கக் கூடாது, சாதாரணமான உடையில் இருக்க வேண்டும் என்று நான் சொன்னதை ஏற்றுக்கொள்ளாமல் வாக்குவாதம் செய்தார். அந்த படம் வெளியான பின்பு, அந்த காட்சியை பார்த்து தனது தவறை உணர்ந்துக்கொண்டார். பிறகு நீங்கள் சொன்னதுதான் சரி சேரன் என்று என்னிடம் வருத்தப்பட்டார்.
அதுக்குதான் எப்பவுமே இயக்குனர், உதவி இயக்குனர் சொல்வதை கேட்கணும் என்று அருகில் இருந்த விஜயகுமாரும் சொன்னார். அவர் ஒரு நடிகராக இருந்தாலும் இயக்குனர், உதவி இயக்குனருக்குதான் சப்போர்ட் ஆக பேசுவார். அதனால்தான் பாரதி கண்ணம்மா படத்தில் அந்த கேரக்டரில் அவரை கொண்டு வந்தேன்.
பாரதி கண்ணம்மா படத்தின் ஷூட்டிங் போது கூட நடிகர் பார்த்திபனிடம், பார்த்திபன் நாம நடிக்க வந்திருக்கோம். நடிச்சுட்டு போவோம். இயக்குனர் அவர்தானே, நீங்க ஏன் தலையிடறீங்க? இயக்குனர் சொல்வதை கேட்க வேண்டும். அவர் சொல்றதை கேளுங்க என்று அதட்டி சொல்வார். சரி சார், எனக்கென்ன என்று பார்த்திபனும் போய் விடுவார். இதெல்லாம் விஜயகுமாரிடம் எனக்கு ரொம்ப பிடித்த விஷயங்களாக இருந்தது, என்று இயக்குனர் சேரன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





