நடிகர் விஜய் நடிப்பில் தற்போது திரைக்கு வந்து வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். இதுவரை 460 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தனது 69வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் டைரக்சன் செய்கிறார்.
விஜய் 69 படத்தின் பூஜை நாளை ( 4ம் தேதி)யும், அதைத் தொடர்ந்து 5ம் தேதி சனிக்கிழமை பையனூரில் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பும் துவங்குகிறது என தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த விவரங்கள் தொடர்ந்து அப்டேட் ஆகி வருகின்றன. முதல் கட்டமாக இந்த படத்தில் வில்லனாக பாபி தியோல் நடிப்பது உறுதியானது. இவர் கங்குவா படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.
விஜய் 69 படத்தில் நடிகைகள் பூஜா ஹெக்டே, பிரேமலு பட நடிகை மமிதா பைஜூ ஆகியோர் நடிப்பதாகவும் படக்குழு தரப்பில் இருந்து போஸ்டர்களுடன் தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் இந்த படத்தில் பிரியாமணி, பிரகாஷ்ராஜ், சிம்ரன், சமந்தா, மோகன்லால் உள்ளிட்டோரும் நடிப்பதாக தகவல்கள் இருக்கின்றன. தொடர்ந்து வரும் அறிவிப்பு போஸ்டர்களில் இவர்களது பெயர்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய் நடிக்கும் 69வது படம் அரசியல் சார்ந்த படமாக தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் கமர்சியல் படமாகவே இருந்தாலும் அவர் இந்த படத்துடன் தனது திரையுலக நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு தமிழக வெற்றி கழகம் என்ற தனது அரசியல் கட்சியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட இருக்கிறார். வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை விஜய் குறிவைப்பதால் அவரது கடைசி படத்தில் நிச்சயமாக அரசியல் சார்ந்த வசனங்களும் காட்சிகளும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
அதனால் இந்த படத்தை தயாரிக்கும் கே வி என் புரடக்சன்ஸ் நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரிப்பதாகவும், இந்த படத்தில் நடிக்க நடிகர் விஜய்க்கு 275 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பூஜா ஹெக்டே, இந்த படத்திலும் நாயகியாக நடிக்கிறார்.விஜய் 69 படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
மேலும் விஜய் 69 படத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு தற்போது அறிவித்துள்ளது. இவர் ஏற்கனவே பல படங்களில் நடித்த நிலையில், சமீபமாக இனி படங்களில் நடிப்பதில்லை. டைரக்சன் மட்டுமே செய்யப்போவதாக கூறியிருந்தார். மம்முட்டி நடிக்கும் ஒரு படத்தையும் மலையாளத்தில் தற்போது இயக்கி வருகிறார். ஆனால் விஜயின் 69வது படத்தில் கௌதம் மேனன் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்தாண்டில் வெளியான லியோ படத்தில் விஜயுடன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.





