தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றி படங்களை கொடுத்தவர் சூர்யா. ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சூர்யா நடித்த படங்கள் எதுவுமே வெற்றி படமாக அமையவில்லை. இதற்கிடையே 2021ம் ஆண்டில் வெளிவந்த சூரரைப் போற்று படமும் 2022 ஆம் ஆண்டில் வெளிவந்த ஜெய்பீம் படமும் சூர்யாவுக்கு வணிக ரீதியாக வெற்றியைத் தந்த படங்களாக இருந்தன.
ஏனெனில் இந்த 2 படங்களுமே அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான படங்களாக இருந்தன. கொரோனா தொற்று பாதித்த காலத்தில் இந்த படங்கள் நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டன. ஆனால் தியேட்டரில் 10 ஆண்டுகளில் வெளியான சூர்யா நடித்த 10 படங்களும் பலத்த தோல்வியை தழுவின.
குறிப்பாக 2013ம் ஆண்டில் வெளியான சிங்கம் 2 படத்தின் வெற்றிக் பிறகு சூர்யா நடித்த கங்குவா படம் வரை தொடர்ந்து, 10 ஆண்டுகளில் 10 படங்களும் பலத்த தோல்வி படங்களாக அவருக்கு அமைந்தன. சிங்கம் 3, அஞ்சான், தானா சேர்ந்த கூட்டம், மாசு என்கிற மாசிலாமணி, காப்பான், 24, பசங்க 2, என் ஜி கே, எதற்கும் துணிந்தவன், கங்குவா என 10 படங்களும் அவருக்கு படுதோல்வி படங்களாக அமைந்து விட்டன.
இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 14ம் தேதி வெளியான கங்குவா படம் நிச்சயமாக சூர்யாவுக்கு வெற்றியைத் தரும் என்று எதிர்பார்த்த நிலையில், அந்தப் படமும் ஏமாற்றத்தை தந்து விட்டது. இந்த சூழ்நிலையில் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அவரது 44 வது படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா 44 படத்தில் கதாநாயகியாக பூஜாஹெக்டே நடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர். இப்போது மீண்டும் தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜூ ஜார்ஜ், சுஜித் சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இரட்டை வேடத்தில் இந்த படத்தில் சூர்யா நடித்திருக்கிறார். இது கேங்ஸ்டர் படம் அல்ல, காதல் கதைக்களத்தில் உருவான படம் என்றும் சொல்லப்படுகிறது.
சமீபத்தில் சூர்யா 44 படம் குறித்து பேசிய இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், சூர்யா ஒரு சிறந்த நடிகர். அவரைப் போன்ற ஒருவருடன் பணியாற்றுவது என்பது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். சூர்யா 44 படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் டிசம்பர் மாதம் துவங்குகிறது. அதையடுத்து பிரமோஷன் பணிகளும் நடக்கும். இந்த படம் அடுத்த ஆண்டு ஸம்மரில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். அதனால் வருகிற ஏப்ரல் மாதம் 10ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.





