தமிழ் சினிமாவில் தரமான திரைப்பட இயக்குனர்களின் மிக முக்கியமானவர் ஹெச் வினோத். அதை அவரது முதல் திரைப்படமான சதுரங்க வேட்டையிலேயே நாம் தெரிந்து கொள்ளலாம். நாள்தோறும் நம்மைச் சுற்றி நடக்கும் பித்தலாட்டங்களையும், மோசடிகளையும் மிகத் தெளிவாக அந்த திரைப்படத்தில் கூறியிருப்பார் வினோத்.
ஏன் சதுரங்க வேட்டையை விட மிக எளிதாக மோசடிகளை எல்லாம் அம்பலப்படுத்த முடியாது என்றே கூறலாம். தனது உயிரோட்டமான நடிப்பின் மூலம் இந்த திரைப்படத்திற்கு உயிர் கொடுத்தவர் நட்டி. இப்போது வரை எங்கு ஏதாவது ஒரு மோசடி நடைபெற்றால் அது சதுரங்க வேட்டை பட பாணியிலேயே என்று பலரும் எழுதுவார்கள்.
அந்த அளவுக்கு அந்த திரைப்படத்தில் தனது எழுத்தின் திறமையை வினோத் காட்டி இருந்தார். இந்த திரைப்படம் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் படத்தில் இடம்பெற்ற மிக அழுத்தமான வசனங்கள். கோழிக்காக பாவப்பட்டால் சிக்கன் 65 கிடைக்காது என்பது போன்ற சில வசனங்கள், சிரிக்க வைக்கும் வகையிலும் யோசிக்கும் விதமாகவும் அமைந்தது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை எடுத்து நம்மை அதிர வைத்தார் வினோத். போலீஸ் கதையிலேயே ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் இந்த திரைக்கதையை எழுதினார். இதற்கும் கனக்கச்சிதமான கதாநாயகனாக கார்த்தி பொருந்தியதால் தீரன் அதிகாரம் ஒன்று வெற்றிவாகை சூடியது.
இதன் பின்னர் அஜித் குமாருடன் அவர் இணைந்து மூன்று திரைப்படங்களை இயக்கினார். இதில் முதல் படமான நேர்கொண்ட பார்வை அந்த அளவுக்கு ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. இந்தியில் வெளியான, பிங்க் படத்தின் ரீமேக்காக தான் இது எடுக்கப்பட்டது. இதன்பிறகு அஜித்தை வைத்து அவர் எடுத்த வலிமையும் தோல்வியடைந்தது.
துணிவு திரைப்படம் ஓரளவு வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் விஜய்யின் கடைசி படத்தை இயக்க இருக்கிறார். சசிகுமார் நடித்திருக்கும் நந்தன் திரைப்பட விழாவில் பேசிய வினோத், ஒரு பெரிய ஹீரோவை வைத்து இயக்குவதோ அல்லது ஒரு பெரிய பட்ஜெட் படமும் இயக்குவதோ இங்கு நல்ல படம் கிடையாது. ஒரு மனிதனை நல்ல ஒரு மனிதத் தன்மையை உள்ளவனாக மாற்றுவதே இங்கு நான் ஒரு சிறந்த படம் என்பேன். அதுதான் இந்த நந்தன் என்று பேசியிருக்கிறார். வினோத்தின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.





