நடிகர் விஜய் இன்று தமிழ் சினிமா கொண்டாடும் உச்ச நட்சத்திர நடிகராக இருக்கிறார். தி கோட் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துடன் சினிமாவுக்கு குட்பை சொல்லும் விஜய், முழு நேர அரசியல்வாதியாக மாறி, தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சிப் பணிகளை தொடர இருக்கிறார்.
விஜய் நடிக்க வந்த ஆரம்பத்தில் பெரிய அளவில் வெற்றிப் படங்களை தர முடியவில்லை. பல படங்களில் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் மகன் விஜய் என்ற அடையாளம் மட்டுமே அவருக்கு இருந்தது. விஜயகாந்துடன் விஜய் நடித்த செந்தூரப்பாண்டிதான் அவரை தமிழ் சினிமா ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.
ஆனால் நாளைய தீர்ப்பு, ராஜாவின் பார்வையிலே, ரசிகன், தேவா என பல படங்களில் நடித்தாலும் விஜயின் திரையுலக பயணத்தில் மிகப்பெரிய மாற்றங்களை, முன்னேற்றங்களை ஏற்படுத்திய படங்கள் என்றால் அது பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், லவ் டுடே, காதலுக்கு மரியாதை, கில்லி, திருமலை, போக்கிரி ஆகிய படங்களாக தான் இருந்தன.
போக்கிரி படத்துக்கு பிறகு ரஜினிகாந்த், கமல்ஹாசன் அளவுக்கு நடிகர் விஜய் முன்னிலை பெற்று முன்னணி நடிகராக மாறிவிட்டார். அதன்பிறகு அவர் நடித்த எல்லா படங்களுமே அவரை அடுத்த வெற்றிகளை தந்து மேலும் உச்சத்தில் அவரை அமர வைத்துவிட்டது. தற்போது வெளியான தி கோட் படம் வரை அந்த இமேஜில் இருந்து விஜய் சிறிதும் இறங்காமல் பயணித்து வருகிறார்.
ஆரம்பத்தில் விஜய்க்கு வெற்றியை தந்த படங்களில் மிக முக்கியமானது இயக்குனர் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக. இதில் காதலித்த பெண்ணின் குடும்பத்தாரை சேர்த்து வைத்துவிட்டு, காதலியின் நினைவுகளுடன் அங்கிருந்து வெளியேறுவதுதான் நாயகனின் கேரக்டர். அந்த கேரக்டரில் விஜய் நடித்து பெரிய அளவில் ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
இதுகுறித்து இயக்குனர் விக்ரமன் கூறுகையில், பூவே உனக்காக கிளைமாக்ஸில் நடிகர் விஜயை, அவரது குடும்பத்தார் பேரனாக ஏற்றுக்கொள்வது போலவும், சங்கீதாவை திருமணம் செய்துக்கொள்வது போலவும் ஒரு கிளைமாக்ஸ்சும் இருந்தது. ஆனால் கடைசியில் படத்தில் வந்த கிளைமாக்ஸ்தான் இறுதி முடிவாக வைக்கப்பட்டது, அதுவே பெரிய வெற்றியை தந்தது என்றார். அதே நேரத்தில் அடுத்து விக்ரமன் இயக்கத்தில் உன்னை நினைத்து படத்தில் சில நாட்கள் நடித்த விஜய், பிறகு அந்த கேரக்டர் பிடிக்காமல் விலகி விட அந்த கேரக்டரில் சூர்யா நடித்து வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.





