சதுரங்க வேட்டை தீரன் அதிகாரம் 1 நேர்கொண்ட பார்வை வலிமை துணிவு போன்ற படங்களை இயக்கியவர் எச் வினோத். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் நடிகர் விஜய் கடைசியாக நடித்த ஜனநாயகன் படம்தான். இது 300 கோடி ரூபாய் வசூலித்த நிலையில் முழுமையான வசூல் நிலவரம் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ஜனநாயகன் படத்தின் இயக்குனர் எச் வினோத், ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது நடிகர் விஜயுடன் ஜனநாயகன் படப்பிடிப்பின் போது 5 மாதங்கள் நேரடியாக பழகி அவருடன் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் அவரது திரைப்படங்களை மட்டுமே பார்த்து அவரை மக்கள் தலைவனாக எப்படி ஏற்றுக்கொண்டார்கள் என்பது எனக்கு புரியவில்லை என்று கூறினார்.
மேலும் விஜய் முதல்வராக வருவார் என்று நான் நினைக்கவே இல்லை என்றும் எச் வினோத் கூறியது இணையத்தில் வைரலானது. ஒரு படத்தை இயக்கிய இயக்குனரே விஜய் குறித்து எதிர்மறையாக பேசியிருக்கிறாரே என்று பலரும் விமர்சித்தனர். எனினும் அவர் வெளிப்படையாக பேசியதை பலரும் பாராட்டியிருந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் எச் வினோத் கூறியதாவது, நமது வாழ்க்கையை தீர்மானிக்கும் ஓட்டை சமூக வலைதளங்களில் போட வைக்கிறார்கள். நம்மை அறியாமலேயே சமூக வலைத்தளம் மூலம் நம்மை கட்டுப்படுத்துகிறார்கள். நமது சிந்தனை விருப்பம் முடிவுகள் கூட அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடுகிறது.
இது மிகப்பெரிய கவலைக்குரிய விஷயம் என்று இயக்குனர் எச் வினோத் எச்சரித்து பேசியுள்ளார். இப்படி அவர் பேசியிருப்பது கூட தவெக குறித்தும் முதல்வர் விஜய் குறித்தும் தான் என்று விமர்சனம் எழுந்துள்ளது. ஏனென்றால் நடிகர் விஜய் தவெக கட்சி ஆரம்பித்தது போல் இப்போது சட்டசபையில் பேசுகிற வரை எல்லாமே ரீல்ஸ் ஆக சமூக வலைதளங்களில் டிரண்டிங் செய்து வைரலாக்கப்படுகிறது.
தேர்தல் நேரத்தில் ஒட்டுமொத்த தமிழகமே விஜய் பக்கம் இருப்பது போன்ற ஒரு மாய பிம்பத்தை உருவாக்கி சமூக வலைதளங்களில் மூலம் மக்களின் மனநிலையை மாற்றியது தவெகவின் ஐடி விங்க். தவெகவுக்கு ஆதரவாக அவர்கள் செய்த இந்த நூதன பிரசாரம்தான் மக்களை ஏமாற வைத்துவிட்டது. சமூக வலைதளங்கள் மூலம் மக்களை கட்டுப்படுத்தி ஓட்டை தவெக தனக்கு சாதமாக்கி கொண்டது என்பதை தான் எச் வினோத் ஆதங்கமாக கூறியிருக்கிறார் என்று ரசிகர்கள் விமர்ச்சிக்கின்றனர்.





