தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் நடிகர் விஜய். இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக அவர் அரசியல் களத்தில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார். அவரது கடைசி படம் ஜனநாயகன் வரும் பொங்கலுக்கு ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது.
நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், அமெரிக்காவில் சினிமா டைரக்சன் குறித்து படித்தவர். குறும்படங்கள் சில இயக்கிய நிலையில் இப்போது அவர் இயக்குனராக தமிழ் சினிமா களத்தில் குதித்து இருக்கிறார். இப்போது சிக்மா என்ற படத்தை டைரக்ட் செய்து தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.
சிக்மா படத்தை லைக்கா ப்ரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடித்திருக்கிறார். மேலும் பரியா அப்துல்லா ராஜூ சுந்தரம் சம்பத்ராஜ் ஷிவ் பண்டித் அன்புதாசன் யோக் ஜாபி உள்ளிட்ட பலர் சிக்மா படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.
சிக்மா படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வருகிற 23ம் தேதி இந்த படத்தின் டீசர் வெளியாக உள்ளது. இந்நிலையில் தனது முதல் படம் அனுபவம் குறித்து இயக்குனர் ஜேசன் சஞ்சய் கூறியதாவது, லைகா போன்ற ஒரு மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனத்தில் இயக்குனராக அறிமுகமாவது உண்மையிலேயே பாக்கியமாக கருதுகிறேன்.
கதைக்கு என்ன தேவையோ அதை தயாரிப்பாளர்களாக எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் செய்து கொடுத்து படப்பிடிப்புக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். என்னுடைய கிரியேட்டிவ் பிராசஸில் முழு நம்பிக்கை வைத்து எந்த குறுக்கீடும் அவர்கள் செய்யாததால் படப்பிடிப்பை திட்டமிட்ட 80 நாட்கள் ஷெட்யூலுக்கு முன்பாகவே முடித்து விட்டோம்.
நடிகர்கள் மற்றும் படக்குழுவினரின் அற்புதமான முயற்சிக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி. சிக்மா படம் நல்லபடியாக நிறைவடைய ஆதரவு கொடுத்த தயாரிப்பாளர் சுபாஸ்கரன் மற்றும் தமிழ் குமரன், லைகா நிறுவனத்திற்கு நன்றி என்று ஜேசன் சஞ்சய் மகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.





