தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. அன்றைய ரசிகர்களின் கனவுக்கன்னியாக அவர் இருந்தார். சின்னதம்பி படம் பார்த்து அவர்களின் ரசிகர்கள் வட்டம் மிகப்பெரிய அளவில் பெருகியது. குஷ்புவுக்கு கோவில் கட்டுவதாக கூட ஒரு பரபரப்பு அப்போது இருந்தது.
மும்பையில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த குஷ்பு முதன்முறையாக நடித்த படம் தர்மத்தின் தலைவன். பிரபுவுக்கு ஜோடியாக அதில் இளம் நாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு நடிகர் கார்த்திக்குடன் நடித்த வருஷம் 16 படம் அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. தொடர்ந்து பல படங்களில் குஷ்பு நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.
ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகை குஷ்பு ஒரு கட்டத்தில் இயக்குனர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் மொழி படங்களிலும் குஷ்பு நிறைய நடித்திருக்கிறார். இப்போது திரைப்பட தயாரிப்பாளராகவும் பாஜக மாநில துணைத் தலைவராகவும் குஷ்பு இருந்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் கிராமிய படங்களை இயக்கிய பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர் இயக்குனர் கஸ்தூரி ராஜா. இவரது மூத்த மகன் இயக்குனர் செல்வராகவன், இளைய மகன் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது மகள் வழி பேரன் பவிஷூம் இப்போது படங்களில் நடித்து வருகிறார். கஸ்தூரி ராஜாவும் சமீபமாக திரைப்படங்களில் நடிக்க துவங்கி விட்டார்.
இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கிய என் ராசாவின் மனசிலே சோலையம்மா கரிசக்காட்டு பூவே எட்டுப்பட்டி ராசா என் ஆச ராசாவே நாட்டுப்புறப்பாட்டு வீரத்தாலாட்டு என பல படங்கள் பெரிய வெற்றிப் படங்களாக இருந்தன. இவரது இயக்கத்தில் குஷ்பு முக்கிய நாயகியாக நடித்திருக்கிறார். அந்த காலகட்டத்தில் குஷ்பு முன்னணி நாயகியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் கஸ்தூரி ராஜா கூறியதாவது, எட்டுப்பட்டி ராசா எல்லாம் இப்போது எடுக்க முடியுமா? குஷ்பு மாதிரி ஒரு நடிகை எல்லாம் அரிது. ஒரு கிராமத்தில் சூட்டிங் செய்த போது அங்கு ஆடை மாற்றுவதற்கு கூட இடமில்லை. இதை தெரிந்துக்கொண்ட குஷ்பு அசிஸ்டென்டுகளை புடவையை நான்கு பக்கமும் பிடிக்க வைத்து உடனே ஆடை மாற்றிக் கொண்டு வந்து நடித்தார். குஷ்பூவுக்கு வயதாகி விட்டதே என்று வருத்தப்பட்ட முதல் ஆள் நான்தான். அவரைப் போன்ற சின்சியரான நடிகையை பார்க்க முடியாது என்று கஸ்தூரி ராஜா கூறியிருக்கிறார்.





