மக்கள் நீதி மய்யம் அரசியல் இயக்கத்தின் தலைவராக நடிகர் கமல்ஹாசன் தமிழக மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பது கசப்பான உண்மைதான். ஆனால் ஒரு திரைப்பட கலைஞனாக அவரை எதிரிகள் கூட பாராட்டும் அளவுக்கு அவர் ஒரு உன்னத படைப்பாளியாக தன்னை வெளிப்படுத்தியவர் என்றால் அது மிகையல்ல.
தமிழ் சினிமாவை தனது படங்கள் வாயிலாக அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு சென்ற பெருமை நடிகர் கமல்ஹாசனை மட்டுமே சேரும். அவர் நடித்த இயக்கிய தயாரித்த சில படங்கள்தான் தமிழ் சினிமாவின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு காரணமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த படங்கள் தான் மற்ற படங்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தது.
உதாரணமாக குணா அன்பே சிவம் குருதிப்புனல் மகாநதி ஹேராம் தசாவதாரம் என பல படங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். இப்போதும் நடிகர் கமல்ஹாசனாக தமிழக மக்கள் அவரை கொண்டாட தயாராக இருக்கின்றனர். ஆனால் அவர் அரசியல் ஈடுபாடு காரணமாக சினிமாவில் ஒரு கால் அரசியலில் ஒரு கால் என்று இருந்து வருகிறார்.
நடிகர் கமல்ஹாசன் பல வேடங்களில் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் 10 வேடங்களில் அவர் நடித்த படம் தசாவதாரம். இதில் பிளட்சர் என்கிற அமெரிக்க ஆங்கிலேயன் கேரக்டரில் கமல் வில்லனாக நடித்திருப்பார். அவர் வரும் காட்சிகளும் அவரது மிரட்டலான நடிப்பும் தசாவதாரம் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக இருந்தது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய தசாவதாரம் படத்தின் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் கூறியதாவது, யப்பா… இந்த வெள்ளைக்காரனை பார்த்தா மட்டும் ரொம்பவும் பயமா இருக்குது. இவனை எங்க இருந்து புடிச்சீட்டு வந்தீங்க என்று தசாவதாரம் படம் பார்த்த ஆச்சி மனோரமா என்கிட்ட இண்டர்வெல் டைம்ல கேட்டாங்க.
அதுவும் கமல் சார் தாம்மா என்று அவர்கிட்ட சொன்னேன். அய்யய்யோ கமல் சாரா? அப்படீன்னு சொல்லிட்டு அவர் கிட்ட போய் நீயாப்பான்னு கேட்டுட்டு அழுதுட்டாங்க. தன்னை யாருன்னே தெரியாத அளவுக்கு பண்றதுல கமல் சார் கில்லாடி என்று அந்த நேர்காணலில் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் கூறியிருக்கிறார்.





