இயக்குநர் லிங்குசாமி தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர். ரன், சண்டைக்கோழி, சண்டைக்கோழி 2, அஞ்சான், பையா, வேட்டை, ஆனந்தம், பீமா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தந்தவர் லிங்குசாமி. அவரது படங்களில் எப்போதுமே ஒரு தனித்துவம் இருக்கும்.
நடிகர் விஷாலுக்கு சண்டக்கோழி நல்ல ஒரு அறிமுகத்தை கொடுத்து, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுத் தந்தது. வழக்கமாக ஹீரோவை வில்லன் கூட்டம் துரத்திய படங்களே வந்துக் கொண்டு இருந்த நிலையில், ஹீரோவின் அடியாட்கள் கூட்டம், வில்லனை துரத்தும் வித்யாசமான கதைக்களமாக இப்படம் இருந்தது.
அடுத்து ஆனந்தம் படம் மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, சிநேகா, விஜயகுமார், டெல்லி கணேஷ், ஸ்ரீவித்யா நடித்த மிகச்சிறந்த ஒரு குடும்ப படமாக அமைந்தது. குடும்ப உறவுகளை மையப்படுத்திய இந்த படமும் லிங்குசாமிக்கு ஒரு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
அஞ்சான், பையா, வேட்டை, பீமா போன்ற படங்கள் மிகப்பெரிய ஆக்சன் படங்களாக இருந்தன. இது ஆக்சன் பிரியர்களான ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற படங்களாக அமைந்தன. சூர்யா, கார்த்தி, ஆர்யா, சியான் விக்ரம் போன்றவர்களுக்கு இது மாறுபட்ட படமாகவும் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தன.
ஆனால், சமீப காலமாக லிங்குசாமி படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை. தொடர்ந்து தோல்வி படங்களாக அவருக்கு அமைந்ததால், சில ஆண்டுகளாக படம் இயக்குவதில் அவர் இடைவெளியே விட்டுவிட்டார். இந்நிலையில் இப்போது மீண்டும் பையா 2 படத்தை எடுக்க ஆயத்தமாகி விட்டார். இந்த படத்தில் ஆகாஷ் ஹீரோவாக நடிக்கிறார். முதல் பாகத்தில் கார்த்தி, தமன்னா நடித்திருந்தனர்.
பையா 2 படத்தின் கதை டிஸ்கசனுக்காக உதவி இயக்குநர்களை வரவழைத்து காலை 5.30 மணிக்கு துவங்கி, முற்பகல் 11 மணி வரைக்கும் அவர்களுடன் டிஸ்கசன் நடத்துகிறார். இதற்காக சபரிமலைக்கு விரதம் இருப்பவர்களை போல, லிங்குசாமியின் உதவி இயக்குநர்கள் அதிகாலை 4 மணிக்கே எழுந்து குளித்து, ரெடியாக 5.30 மணிக்கு லிங்குசாமி முன் ஆஜராகி விடுகின்றனர். அதிகாலையில் புத்துணர்ச்சியான நேரத்தில் கதை டிஸ்கசன் செய்தால் கதை சிறப்பாக வரும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்திருக்கிறார் டைரக்டர் லிங்குசாமி. இப்படி ஒரு அதிகாலை டிஸ்கசன் கான்செப்டை எந்த டைரக்டரும் யோசித்திருக்க மாட்டார்கள். உதவி இயக்குநர்கள் பாடுதான் திண்டாட்டமாக இருக்கிறது.





