தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர் இயக்குநர் லிங்குசாமி. கமர்ஷியல் படங்களை கொடுப்பதில் கிங்காக திகழ்ந்த அவரை, சினிமா ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடினர். 2001-ம் ஆண்டு வெளியான ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அவர் அறிமுகமானார். தனது முதல் திரைப்படத்திலேயே அண்ணன் – தம்பி பாசம், குடும்பத்திற்குள் நடக்கும் சிறு சிறு குழப்பம், அதிலிருந்து கிடைக்கும் தெளிவு என திரைக்கதையை சுவாரஸ்யப்படுத்தி சபாஷ் போட வைத்தார் லிங்குசாமி.
ஆனந்தம் திரைப்படம் மெகா ஹிட் அடிக்க, அங்கிருந்த மாதவனை வைத்து ரன் படத்தை அவர் எடுத்தார். காதல் கலந்த பக்கா கமர்ஷியல் திரைப்படமாக உருவான இந்த திரைப்படம், ரசிகர்களுக்கு நல்ல என்டர்டெயினாக மாறியது. யுவன் சங்கர் ராஜா இசையில் அதில் இடம்பெற்ற பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.
இப்படி இரண்டு பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்ததால், அஜித்துடன் இணையும் வாய்ப்பை பெற்றார் லிங்குசாமி. ஜி எனும் பெயரில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. ஹாட்ரிக் வெற்றியை பெறுவாரா லிங்குசாமி என பலரும் எதிர்பார்த்திருந்த வேளையில், படுதோல்வியை அவர் கொடுத்தார். இந்த சூழலில் லிங்குசாமி மீண்டு வருவாரா என பலரும் கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.
அந்த நேரத்தில் விஷாலை வைத்து சண்டக்கோழியை எடுத்த அவர், தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸை அலற விட்டார். படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு ஆக்சன் காட்சிகளும், வசனங்களும் கூர்மையாக தீட்டப்பட, சண்டக்கோழி திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து பீமா, பையா, வேட்டை படங்களை எடுத்த இயக்குநர், சூர்யாவை வைத்து அஞ்சான் திரைப்படத்தை இயக்கினார்.
அதர பழசான கதையை அவர் தொட்டதால் அஞ்சான் படுதோல்வியை சந்தித்தது. அது மட்டுமல்லாமல் இணையத்தில் லிங்குசாமி பலரும் கிண்டல் அடிக்க தொடங்கினர். நாளுக்கு நாள் அவர் வறுத்தெடுக்கப்பட, சிறிதுகாலம் படம் எடுப்பதிலிருந்து விலகினார் லிங்குசாமி. பின்னர் சண்டக்கோழி 2, தி வாரியர் என இரண்டு தோல்வி படங்களைக் கொடுத்து இன்னும் மீளமுடியாமல் அவர் தவித்து வருகிறார். இந்த நிலையில், தனியார் யூ டியூப் சேனலுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், ஜி படம் தொடர்பாக ஒரு விஷயத்தை கசியவிட்டுள்ளார்.
“ஒரு முறை ரஜினிடம் என்னிடம் அடுத்த படம் குறித்து கேட்க, அஜித்தை வைத்து ஜி படத்தை எடுக்கப் போவதாக கூறினேன். அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தேன். கதையை கேட்ட ரஜினிகாந்த், இதற்கான வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதா என்று கேட்டார். இதனை எனக்கு செய்தால் எப்படி இருக்கும் என்று கேட்டார். அது கல்லூரி மாணவருக்கான கதை என்பதால் சாரை நான் பார்க்க, இல்லை, இல்லை இது தொழிற்சாலையில் நடக்கும் மோதலாக வைத்துக்கொள்வோம். அங்கு ஒரு தேர்தல். அதில் மல்லுக்கட்டி அங்கிருந்து பொதுத்தேர்தலுக்கு நாம் செல்வதுபோன்று கதையை வைத்துக் கொள்ளலாம் என்று ரஜினி கூறினார். ஆனால் இது நன்றாக இருக்காது என்று நான் கூறிவிட்டேன்” என லிங்குசாமி கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், அஜித்திற்கு வந்த கதையை ரஜினி தட்டிபறிக்க எண்ணியதாக சிலர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.





