தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவன தயாரிப்பாளராகவும் இருந்து வருபவர் லிங்குசாமி. சண்டக்கோழி அஞ்சான் வேட்டை பையா பீமா ஜி ரன் ஆனந்தம் சண்டக்கோழி 2 உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் லிங்குசாமி.
கடந்த 2001ம் ஆண்டில் நடிகர்கள் மம்முட்டி முரளி நடிகைகள் தேவயானி ரம்பா உள்ளிட்டோர் நடித்த ஆனந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் லிங்குசாமி இயக்குனராக அறிமுகமானார். அவர் இயக்கிய படங்களில் ஆனந்தம் ரன் சண்டக்கோழி பையா வேட்டை உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படங்களாக இருந்தன.
இது தவிர அவர் திருப்பதி பிரதர்ஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து பிரபு சாலமன் இயக்கிய கும்கி பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன் போன்ற பல படங்களையும் தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 24 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் லிங்குசாமி இயக்கிய ரன் படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இயக்குனர் லிங்குசாமி இயக்கிய பல படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக இருந்ததால் அந்த படங்களின் தொடர்ச்சியாக 2ம் பாகம் உருவாக வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர். அந்த வகையில் ரன் பையா போன்ற படங்களை 2ம் பாகமாக ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் சண்டக்கோழி 2ம் பாகமாக வெளியாகி மாபெரும் தோல்வியை சந்தித்து.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் லிங்குசாமி கூறியதாவது, ரன் படம் 2ம் பாகம் கண்டிப்பாக வரவே வராது. என்னுடைய வாழ்க்கையில் நான் அந்த தப்பை மட்டும் பண்ணவே மாட்டேன். ஒரு தடவைதான் அந்த மேஜிக் எல்லாம். அதை வந்து நாம் கெடுத்துடவே கூடாது. அதை வந்து நம்மளே கெடுக்கற மாதிரி ஆயிடும்.
ஒரு தடவை நானே கெடுத்துட்டேன். சண்டக்கோழி 2 படம் எடுத்து கெடுத்துட்டேன். இன்னொரு வாட்டி அந்த தப்பை நான் பண்ணக் கூடாது. அய்யோ அந்த பக்கம் கையே வைக்க கூடாது என்று அந்த நேர்காணலில் இயக்குனர் லிங்குசாமி வெளிப்படையாக கூறியிருக்கிறார். மேலும் தனது திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன் படத்தின் சில காட்சிகளை மட்டும் மாற்றியிருந்தால் அந்த படமும் பெரிய வெற்றியை பெற்றிருக்கும் என்றும் லிங்குசாமி கூறியிருக்கிறார்.





