தமிழ் சினிமாவில் ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் என முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்த படங்கள் என்றாலே விநியோகஸ்தர்கள் தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் ஒரு பலத்த நம்பிக்கை ஏற்படும். நிச்சயமாக இந்த படங்கள் பெரிய அளவில் கணிசமான லாபத்தை கொடுக்கும் என்று எதிர்பார்ப்பார்கள். அதே போல் பல படங்கள் வெற்றி பெற்று அவர்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றியும் இருக்கின்றன.
தமிழ்நாட்டில் இப்போது மல்டி பிளக்ஸ் தியேட்டர்களின் எண்ணிக்கை பெருகி விட்டது. சிங்கிள் தியேட்டர்கள் எல்லாம் பி மற்றும் சி சென்டர்களில் மட்டும்தான் காணப்படுகின்றன. ஒரே வளாகத்தில் 5 திரைகள் முதல் 8 திரைகள் கொண்ட தியேட்டர்கள் என விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன.
இப்படி இருந்தால் மட்டுமே ஒரு படம் நஷ்டம் என்றாலும் கூட மற்றொரு படம் தரும் லாபத்தால் அந்த நஷ்டத்தை தியேட்டர் உரிமையாளர்கள் ஈடுகட்ட முடியும்.
அதனால் இயக்குனர்களை நம்பி நல்ல நடிகர்களை நம்பி மேலும் இசையமைப்பாளர்களை நம்பி பல படங்களை அதிக விலை கொடுத்து தியேட்டர் உரிமையாளர்கள் வாங்குகின்றனர். சில நேரங்களில் குடும்பஸ்தன் பார்க்கிங் லப்பர் பந்து மாமன் டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்கள் பெரிய நட்சத்திர நடிகர்களின் படங்களை விட கணிசமான லாபத்தை தந்து விடுவதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2005ம் ஆண்டில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான படம் ஜி. இந்த படத்தில் அஜீத் குமார் நாயகனாகவும் திரிஷா நாயகியாகவும் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் கலவையான விமர்சனங்களையே இந்த படம் பெற்றது. எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அந்த ஆண்டில் வெளியான பிளாப் படங்களில் ஜி படமும் ஒன்றாக போய்விட்டது.
ஜி படத்தின் இயக்குனர் லிங்குசாமி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டு படங்களை தந்தவர். அவர் இயக்கிய படங்களில் ஒரு சில படங்கள் எதிர்பாத்த வரவேற்பை பெறவில்லை. அதில் அஜீத்குமார் நடித்த ஜி படமும் ஒன்று. இந்த படம் கடந்த 2005ம் ஆண்டில் வெளியான ஒரு ஆக்சன் திரைப்படமாகும். இந்த படத்தை எஸ்எஸ் சக்ரவர்த்தி தயாரித்திருந்தார். படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.
அந்த படம் வெளியான போது நடந்த ஒரு சம்பவம் குறித்து இயக்குனர் லிங்குசாமி சமீபத்தில் கூறியதாவது, ஜி படம் வெளியான அன்று ஒரு தியேட்டர் ஓனர் எனக்கு போன் செய்து பேசினார். என்னய்யா படம் எடுத்து வச்சிருக்க? உன்னை நம்பித்தானே வாங்கினேன்? என்னய்யா கேவலமா எடுத்து வச்சிருக்க? தியேட்டருக்கு பெயிண்ட் எல்லாம் அடிச்சு வச்சேன் என்று கோபத்துடன் பேசினார். இது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு இயக்குனர் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையை பூர்த்தி செய்ய தவறிவிட்டதாக உணர்ந்த தருணம் அது என்று இயக்குனர் லிங்குசாமி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





